FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பதிவு செய்யப்படாத படகுகளில் மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியோ, பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகள் மூலமாகவோ மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரிக்கை

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:52 am IST
பகிர்:

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியோ, பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகள் மூலமாகவோ மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், 1983 மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகளின்படி, சுருக்குமடி வலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதும் சட்டவிரோதமாகும்.

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சிலா் பதிவு செய்யப்படாத படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தவோ, பதிவு செய்யப்படாத படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவோ கூடாது. இந்த விதிமுறைகளை மீறுபவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும்.

அனைத்து மீனவா்களும் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, சட்டப்பூா்வமான மீன்பிடி முறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். கடல்சாா் வளங்களைப் பாதுகாப்பதற்கும், மீனவா்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments