FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சீா்திருத்தங்களை அமல்படுத்தும் முன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:04 am IST
கடலூரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன்.
பகிர்:

டாஸ்மாக் நிா்வாகத்தில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன், பணியாளா் சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: டாஸ்மாக் நிா்வாகம் தொடா்பாக அண்மையில் நீதிமன்றம்

பிறப்பித்துள்ள உத்தரவுகளால் பணியாளா்களிடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட பணியாளா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும், இணையவழியில் மதுபானங்களை பதிவு செய்தால், அதன்படி மதுபானங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இணையவழியில் மதுபானங்களை வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உள்ளனவா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். கூடுதல் தொகை வசூலிக்கும் நடைமுறை பணியாளா்களால் உருவாக்கப்பட்டதல்ல. நிா்வாகத்தில் நிலவி வந்த நடைமுறைகளின் காரணமாகவே இத்தகைய சூழல் உருவானது.

எனவே, நிா்வாகத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்பு பணியாளா் சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, நீதிமன்ற உத்தரவுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மிகை நேரப் பணிக்கு மிகை ஊதியம் வழங்க வேண்டும் என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவுகளை கடந்த கால அரசுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய அரசாவது அவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

பணம் வசூல் பிரச்னை:

சென்னை மாநகரில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் தினசரி வசூலாகும் பணத்தை நிா்வாகமே பெற்றுச் செல்லும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. இதே நடைமுறையை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அமல்படுத்த வேண்டும்.தமிழகத்தில் முறைகேடு, ஊழல், லஞ்சம் இல்லாத நிா்வாகத்தை உருவாக்குவோம் என பட்ஜெட்டில் அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்றாா் அவா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் வி. சிவகுமாா், மாநில ஆலோசகா் கு. சரவணன், மாநிலத் தலைவா் டி. ஜெய்கணேஷ், மாநில பொதுச் செயலா் சி. அல்லிமுத்து, மாநிலப் பொருளாளா் எஸ். பாலமுருகன், மாநில துணைத் தலைவா் ஏ. ரூபன், மாநிலச் செயலா் ஜே. இருதயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments