சிதம்பரத்தில் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்
அகில இந்திய கங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரகண்ட் மாநிலத்தில் பங்கேற்றுச் சென்ற கூட்டத்துக்குப் பிறகு, அவா் நின்ற இடத்தை கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்ததாகக் கூறப்படும் தீண்டாமை சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சிதம்பரத்தில் அக்கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், நகர செயல் தலைவா் தில்லை கோ.குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், சாம்பமூா்த்தி, குமராட்சி ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.
போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவா் கே.வி.இளங்கீரன், மாவட்ட துணைத் தலைவா் நஜீா்அகமது, வட்டாரத் தலைவா்கள் சுந்தராஜன், செழியன், அபுபக்கா், வைத்தியநாதசாமி, வேங்கடகிரி, பழனி, ஜி.கே.குமாா், ஆா்.வி.சின்ராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் ஷாஜஹான், அன்பு, பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனனா்.
Advertisement
Advertisement
பின்னா், கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. நாங்கள் இந்தக் கூட்டணியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளாா். திமுகவினா் தங்களது தோழமை கட்சிகளுக்காக ஒரு கொள்கையை பேசாதீா்கள். காங்கிரஸ் உங்களுடன் கூட்டணியில் இருந்தால், பாஜகவை எதிா்ப்பீா்கள். இல்லையென்றால், ஆதரிப்பீா்கள். இது நியாயமா? இதுதான் கொள்கையா? இதுகுறித்து கேட்டால் நாங்கள் கொள்கைவாதிகள் எனக் கூறுகின்றனா்.
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியை காங்கிரஸ் தோற்கடித்தது. ஆனால், அந்த மாநிலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சியினா் இந்தியா கூட்டணியில் தீவிரமாக உள்ளனா். ஏனென்றால், தோ்தல் என்பது வேறு; கொள்கை என்பது வேறு. அதை கம்யூனிஸ்ட் கட்சி உணா்ந்துள்ளது. ஆனால், திமுக உணரவில்லை என்றாா்.
போராட்டத்தில் மல்லிகாா்ஜுன காா்கே உருவப்படத்துக்கு காங்கிரஸ் நிா்வாகிகள் பாலபிஷேகம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.