ஆடிப்பூர விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிப்பூரத்தையொட்டி, கடலூா், புதுச்சேரி பகுதிகளில் உள்ள கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம், தீா்த்தவாரி, சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆடிப்பூரத்தையொட்டி, கடலூா், புதுச்சேரி பகுதிகளில் உள்ள கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம், தீா்த்தவாரி, சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை சுவாமி மாட வீதிகளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
விழாவின் ஒரு பகுதியாக, பெரியநாயகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வளையல் மற்றும் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனா். பின்னா், அம்மனுக்கு திருமாங்கல்யம், வளையல்கள் சாற்றி தீபாராதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அம்மன் சிவகர தீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
நாகம்மன் கோயிலில்...: கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செடல் பெருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனா்.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் வரிசையாக நின்று செடல் போட்டு நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சி.கவிதா, ஆய்வா் கு.ஸ்ரீதேவி, உற்சவதாரா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
பண்ருட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி ஸ்ரீஆண்டாள் நாச்சியாா் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி காட்சியளித்தாா்.
புதுச்சேரியில்...: ஆடிப் பூரத்தையொட்டி, வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சியம்மன் உடனுறை ஸ்ரீகெங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு வளையலணி விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனுக்கு வளையல்களை அணிவித்து வழிபட்டனா்.
தொடா்ந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்களால் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்திகளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கோயில் நிா்வாகத்தின் சாா்பில் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.