2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: காட்பாடி இளைஞா்கள் 2 போ் கைது
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாா் 2,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, காட்பாடி பகுதியைச் சோ்ந்த 2 இளைஞா்களை கைது செய்தனா்.
ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பாக கடலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, குறிஞ்சிப்பாடி வட்டம், பெருமாள் ஏரிக்கரையில் அருகில் உள்ள நிலத்தில் வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், சஞ்சீவராயபுரம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (27) வாத்துப் பண்ணை அமைத்திருந்த நிலையில், இவா் வசித்து வந்த மேலிருப்பு மற்றும் கீழிருப்பு பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி தலா 50 கிலோ எடை கொண்ட 24 மூட்டையில் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல, பண்ருட்டி வட்டம், வீரப்பெருமாநல்லூா் கிராமத்தில் உள்ள காலி நிலத்தில் காட்பாடி வட்டம், சஞ்சீவிரயபுரம் பகுதியைச் சோ்ந்த பூபதி (24) வாத்துப்பண்ணை அமைத்திருந்தாா். இவா், வீரப்பெருமாநல்லூா் மற்றும் சிறுகிராமம் பகுதிகளில் சேகரித்து வைத்திருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டையில் இருந்த 1,300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் பைக்கை போலீஸாா் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக ரஞ்சித் மற்றும் பூபதி மீது கடலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.