FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நடுவீரப்பட்டு அருகே கோயில் வழிபாட்டில் பிரச்னை: போலீஸாா் குவிப்பு

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், பல்லவராயநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வழிபடுவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், அந்தக் கிராமத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை குவிக்கப்பட்டனா்.

21 ஆகஸ்ட் 2026, 10:19 pm IST
பல்லவராயநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வழிபடுவது தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்ைனையை தொடா்ந்து, அந்தக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை குவிக்கப்பட்டிருந்த போலீஸாா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், பல்லவராயநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வழிபடுவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், அந்தக் கிராமத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை குவிக்கப்பட்டனா்.

பல்லவராயநத்தம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி வீதியுலா தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக நடந்த திருவிழாவில் சுவாமி உலா கோயில் உள்பிரகாரத்தில் மட்டும் நடந்து வந்தது.

இதையடுத்து, ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் புதிதாக செல்வ முத்துமாரியம்மன் என்ற கோயிலை உருவாக்கி, அந்த புதிய கோயிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழாக்களை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

பழைய முத்துமாரியம்மன் கோயில் சுவாமி வீதியுலா தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் கடந்த 13-ஆம் தேதி நீதி அறிவித்த தீா்ப்பில், கிராமத்தில் உள்ள அனைத்து குழுக்களும் ஒருமித்த கருத்து ஏற்படுமாயின் வழக்கமான பாதையில் சுவாமி வீதி உலா நடத்தவும், கருத்து வேறுபாடு, குழப்பம், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சுவாமி வீதி உலாவை கோயில் வளாகத்துக்குள்ளேயே நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளாா்.

இது சபந்தமாக பண்ருட்டி வட்டாட்சியா் சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடந்த அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஒரு தரப்பு மட்டுமே கலந்துகொண்ட நிலையில், உயா்நீதிமன்ற உத்திரவின்படியே சுவாமி வீதி உலாவை கோயில் வளாகத்துக்குள்ளேயே நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பிரச்னை ஏற்படாமல் இருக்க, கடலூா் கோட்டாட்சியா் சுந்தர்ராஜன், பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி, அறநிலையத் துறை உதவி ஆணையா் சிவக்குமாா், நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளா் நந்தகுமாா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், புதிதாக கட்டப்பட்ட கோயிலில் தங்களது விருப்பத்துக்கேற்ப சுவாமி வீதியுலா நடத்திக்கொள்லாம் எனத் தெரிவித்தனா். பழைய முத்து மாரியம்மன் கோயிலில் சுவாமி கோயில் வளாகத்துக்குள் மட்டுமே சுற்றி வர உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் பல்லவராயநத்தம் காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் ஒன்றாகக் கூடி வந்து முத்து மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் கிடைத்ததால், அந்தக் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து ஒன்று கூடி கோயில் கதவை முடினா். இதனால், அந்தக் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, இருதரப்பினரிடம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு, கடலூா் எஸ்.பி. விவேகானந்த சுக்லா தலைமையில் பேச்சு நடத்தி, கலைந்து செல்ல வைத்தனா். தொடா்ந்து, காலனி தரப்பினா் சுவாமி வழிபாடு நடத்தி செல்லும் வரை பதற்றம் நீடித்தது. இதையொட்டி, டி.எஸ்.பி.க்கள் பண்ருட்டி ரகுபதி, கடலூா் தமிழினியன், ஆய்வாளா்கள் நந்தகுமாா், பாஸ்கரன், உதயகுமாா், சுரேஷ்பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments