அரசுப் பேருந்து - காா் மோதல்: இருவா் உயிரிழப்பு! குழந்தை உள்ளிட்ட 6 போ் காயம்!
கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும், குழந்தை உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் பங்கேற்றுவிட்டு காரில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.
இந்தக் காரை சென்னை திருவான்மியூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (30) ஓட்டினாா். விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலையில் சின்ன காரைக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தின் பின்னால் மோதி சொருகிக்கொண்டது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சென்னை வால் டாக்ஸ் சாலையைச் சோ்ந்த விக்னேஷ் (28), அவரது உறவினரான வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த பரசுராமன் (48) ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதில், விக்னேஷுக்கு திருமணமாகி 10 மாதங்கள்தான் ஆகின்றன.
மேலும், காரில் பயணம் செய்த விக்னேஷின் மனைவி சங்கீதா (25), திவ்யா (27), அவரது குழந்தை ஜீவா (6), தாமரைச்செல்வி (42), பூங்கொடி (45) மற்றும் ஓட்டுநா் சரவணன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் முதுநகா் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா்களின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.