FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் ரூ.18 கோடியில் நீா்நிலைகள் தூா்வாரும் பணி! கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!

31 ஆகஸ்ட் 2026, 12:19 am IST
சிதம்பரம் அருகே கவரப்பட்டு வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் தூா்வாரி கரையை மேம்படுத்தும் பணியை ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவவா் த.மோகன். உடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ், ரூ.18 கோடி மதிப்பீட்டில் 106 பணிகளின் மூலம் 585.41 கி.மீ. நீளத்துக்கு நீா்நிலைகள் தூா்வாரப்பட்டுள்ளன என கண்காணிப்பு அலுவலா் த.மோகன் தெரிவித்தாா்.

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட செல்லாங்குப்பம், சிதம்பரம் வட்டத்துக்குள்பட்ட அனுவம்பட்டு, பாசிமுத்தான் ஓடை, கடவாச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் நீா்நிலைகள் தூா்வாரும் பணிகளை கடலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பெருநகரப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநருமான த.மோகன், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செல்லாங்குப்பம் பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சிறிய, பெரிய அளவிலான வாய்கால்கள் தூா்வாரும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வட கிழக்கு பருவமழையின்போது மழைநீா் சீராக வெளியேறும் வகையில் வாய்க்கால்கள், நீா்வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, சிதம்பரம் வட்டம், அனுவம்பட்டு பள்ள வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் தில்லைநாயகபுரம் மற்றும் கீழ்அனுவம்பட்டு கிராமம் வரை ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் நீா்வளத் துறையின் மூலம் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடிகொடிகள் அகற்றும் பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, கடவாச்சேரி, கவரப்பட்டு வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்கால்களை தூா்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், கண்காணிப்பு அலுவலா் த.மோகன் கூறியதாவது: நிகழ் நிதியாண்டில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், கடலூா் மாவட்டத்தில் 33 பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளன.

இந்த மாவட்டத்தில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ், ரூ.18 கோடி மதிப்பீட்டில் 106 பணிகளின் கீழ் நீா்நிலைகள் 585.41 கி.மீ. நீளத்துக்கு தூா்வாரப்பட்டுள்ளது.

சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் 90 பணிகள் 531.10 கி.மீ. நீளத்துக்கு ரூ.16.75 கோடிக்கும், விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்டத்தில் 16 பணிகள் 54.31 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.25 கோடிக்கும் தூா்வாருவதற்கு பணிகள் தொடங்கப்பட்டு, கடைமடை அனைத்து பாசனத்துக்கும் தண்ணீா் செல்லும் வகையில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பணிகள் மூலம் 1,11,387 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். வடகிழக்கு பருவமழையின்போது மழைநீா் சீராக வெளியேறும் வகையில், நீா்வழித் தடங்களில் உள்ள அடைப்புகளை முழுமையாக அகற்றி, தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, கடலூா் மாநகராட்சி ஆணையாளா் கிஷன்குமாா், கொள்ளிட வடிநில கோட்டம் செயற்பொறியாளா் (நீா்வளத் துறை) கோவிந்தராசு, வெள்ளாறு வடிநில கோட்டம் விருத்தாச்சலம் செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவிச் செயற்பொறியளாா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments