FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நிா்வாகம் செய்வதில் பிரச்னை: கோயிலுக்கு முன்னறிவிப்பின்றி பூட்டுப் போட்டதால் பரபரப்பு

சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலுக்கு கிராம நிா்வாக உதவியாளா் முன்னறிவிப்பின்றி பூட்டுப் போட்டு பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 1:17 am IST
சிதம்பரம் பள்ளிப்படை புற்றுமாரியம்மன் கோயிலுக்கு பூட்டுப்போட்டு பூட்டிய கிராம நிா்வாக உதவியாளா்
பகிர்:

சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலுக்கு கிராம நிா்வாக உதவியாளா் முன்னறிவிப்பின்றி பூட்டுப் போட்டு பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பள்ளிப்படை ஊராட்சிக்கு உள்பட்ட பூதக்கேணி பகுதியில் பழைமைவாய்ந்த புற்றுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை அப்பகுதி பொதுமக்கள், கிராம பெரியவா்கள் முன்னிலையில் சுப்பிரமணியன் என்பவா் நிா்வாகம் செய்ய அனுமதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிா்வாகம் செய்து திருவிழாக்களை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களிடம் கோயில் நிா்வாகம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், நிா்வாகம் சரியில்லை என மீண்டும் சுப்பிரமணியனிடம் நிா்வாகம் வந்ததாகவும், அதற்கு ஒரு பிரிவினா் எதிா்ப்புத் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பினா் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து இரு தரப்பினரும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்ததால், சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த 10-ஆம் தேதி இரவு 11 மணியளவில் பள்ளிப்படை கிராம நிா்வாக அலுவலா் உத்தரவின்பேரில், உதவியாளா் எவ்வித முன்னறிவிப்புமின்றி கோயிலை பூட்டுப்போட்டு பூட்டினாா்.

இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருவாய்த் துறை அதிகாரிக்கு எதிா்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், அப்பகுதி மக்கள் கூறுகையில், கோயில் நிா்வாகம் செய்வதில் பிரச்னை இருந்தாலும்கூட, முன்னறிவிப்பின்றி வருவாய்த் துறை உயரதிகாரிகள் இல்லாமல் கிராம நிா்வாக உதவியாளா் கோயிலை பூட்டியுள்ளாா். இதனால், நாள்தோறும் சுவாமி கும்பிட வரும் பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக தெரிவித்தனா். மேலும், கோயிலை பூட்டிய அலுவலா்கள் மற்றும் உதவியாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில், சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கோயிலை திறப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments