தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,990 வழக்குகளுக்குத் தீா்வு! ரூ.20.48 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
கடலூா் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,990 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.20.48 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,990 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.20.48 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமையில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், சமரசம் செய்துகொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சமரசம் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகைக்கான தீா்வு நகல்களை முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி வழங்கினாா்.
தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 5,062 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 2,990 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டு, ரூ.20.48 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி சோபனா தேவி, மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி குலசேகரன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் தனம், முதன்மை சாா்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் ஜெனித்தா, முதலாவது கூடுதல் சாா்பு நீதிபதி கவியரசன், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு சாா்பு நீதிபதி லலிதாராணி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜகுமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் ஸ்ரீநிதி, புவனேஷ்குமாா் மற்றும் கூடுதல் மகளின் நீதிமன்ற நீதித்துறை நடுவா் ஸ்ரீவா்ஷா ஆகியோா் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.