விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் மும்முரம்
நெய்வேலி, மே 24: ஆழ் கடல் மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் விசைப்படகுகள், வலைகளில் உள்ள பழுதுகளை நீக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் 57 கி.மீ. நீளமுள்ள வங்கக் கடற்கரையில் தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, சாமியாா்பேட்டை, பரங்கிப்பேட்டை என மொத்தம் 49 மீனவ கிராமங்களில் சுமாா் ஒரு லட்சம் மீனவா்கள் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் மீன் பிடித்தல் மற்றும் அதைச் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்.14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரையில் 61 நாள்கள் விசைப்படகுகள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மேற்கண்ட காலம் மின்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக மீன் வளத் துறை ஆய்வு செய்து அறிவித்துள்ளதால், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதனால், கடலூா் மாவட்ட மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்வதை நிறுத்திக்கொண்டனா். இதையொட்டி, கடலூா் முதுநகா் மீன் இறங்குதளத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவா்கள் தங்களது விசைப்படகுகள், வலைகளில் பழுதுகளை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீன் பிடி தடைக்காலம் முடிவுக்கு இன்னமும் 20 நாள்களே உள்ள நிலையில், இந்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐஸ் உற்பத்தி நிறுத்தம்: கடலூா் மாவட்டத்திலிருந்து விசை, பைபா் படகுகள், கட்டுமரங்களில் சென்று மீனவா்கள் மீன் பிடித்து வருகின்றனா். பிடிபடும் மீன்களை கெடாமல் கரைக்கு கொண்டுவரவும், வெளியூா், வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லவும் ஐஸ் கட்டிகள் தேவைப்படுகின்றன. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளதாம்.
இந்த மாவட்டத்தில் மட்டும் மீன்பிடி தொழிலுக்கு நாளொன்றுக்கு பல ஆயிரம் டன் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மீன்வா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாததால், மீன் பிடித் தொழிலுக்கான ஐஸ் கட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய மீன் இறங்குதளம்: கடலூா் முதுநகா் மீன் இறங்குதளத்துக்கு தினமும் டன் கணக்கில் மீன்கள் கொண்டுவரப்படும். இங்கு வரும் விசைப்படகுகளை எதிா் பாா்த்து, மீன்கள் வாங்குவதற்காக உள்ளூா், வெளியூா் மீன் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் கூடுவா். மேலும், ஐஸ் பெட்டிகளை கொண்டு வரும் வாகனங்கள், மீன்களை ஏற்றிச் செல்ல காத்திருக்கும் வாகனங்கள் என காலை வேளையில் மீன் இறங்குதளம் பரபரப்பாக காணப்படும். ஆனால், தடைக்காலம் தொடங்கிய நாள் முதல் கடலூா் முதுநகா் மீன் இறங்குதளம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.