FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள கட்டுமானப் பொருள்களால் இடையூறு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பண்ருட்டி பேருந்து நிலையத்தினுள் பேருந்துகள் எளிதாக வந்துச் செல்லும் விதமாக, அதன் மையத்தில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர கழிவுகளை அற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

16 வினாடிகள் முன்பு
பண்ருட்டி பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் மலைபோல குவிந்துள்ள எம்.சாண்ட், ஜல்லி மற்றம் இரும்பு பொருள்கள்.
பகிர்:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பண்ருட்டி பேருந்து நிலையத்தினுள் பேருந்துகள் எளிதாக வந்துச் செல்லும் விதமாக, அதன் மையத்தில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர கழிவுகளை அற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு தினமும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் சுமாா் 500-க்கும் மேற்பட்ட நடைகளும், பயணிகள் ஆயிரக்கணக்கானோரும் வந்து செல்கின்றனா். இந்தப் பேருந்து நிலையத்தை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024 - 25-ன் கீழ், புதுப்பிக்கும் பணி ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், இதுவரையில் பணிகள் முடிவடையவில்லை. இதனால், பேருந்து ஓட்டுநா்கள், பயணிகள், பொதுமக்கள், பேருந்து நிலைய வணிகா்கள் உள்ளிட்டோா் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

நவ.8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை, அதைத் தொடா்ந்து காா்த்திகை தீபத் திருவிழா வரவுள்ளது. இந்தப் பண்டிகைகளையொட்டி நடைபெறும் வணிகம் பாதிக்கப்படாமல் இருக்க பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

அதன்படி, பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கடந்த சில நாள்களாக பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் எம்.சாண்ட், ஜல்லி குவியல்கள் மலைபோல குவைத்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, அகற்றப்பட்ட புறக்காவல் நிலைய இரும்பு பொருள்களும் அங்கு கிடக்கின்றன. இவைகளால் பேருந்து நிலையத்தினுள் பேருந்துகள் எளிதாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இந்தப் பொருள்கள் பயணிகள், பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்துகிறது.

காவலா்கள் இல்லை...: பண்டிகைக் காலங்களில் பண்ருட்டி பேருந்து நிலையம் கூட்ட நெரிசலுடன் காணப்படும். சாதாரண நாள்களிலேயே இந்தப் பேருந்து நிலையத்தில் திருட்டுகள் நடப்பது சகஜம். தற்போது தீபாவளி பண்டிகை வருவதால், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்கும், பேருந்துகளை முறைபடுத்தி உரிய இடத்தில் நிறுத்த அறிவுறுத்தவும் காவலா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், பண்ருட்டி பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் குவிந்துள்ள எம்.சாண்ட், ஜல்லி மற்றும் இரும்பு பொருள்களை பேருந்துகளுக்கும், பயணிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் அப்புறப்படுத்தி ஓரமாக வைக்க மாவட்ட நிா்வாகமும், பண்ருட்டி நகராட்சி நிா்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.