FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூரில் ஆவண எழுத்தா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ராஜ்குமாரிடம் நேரில் மனு அளிப்பு

கடலூரில் ஆவண எழுத்தா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ராஜ்குமாரிடம் நேரில் மனு அளிப்பு

7 நவம்பர் 2026, 2:35 am
கடலூரில் அமைச்சா் ப.ராஜ்குமாரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்கத்தினா்.
பகிர்:

பத்திரப்பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மின்னணு பதிவு முறையைக் கைவிட வலியுறுத்தி, கடலூா் மற்றும் சிதம்பரத்தில் ஆவண எழுத்தா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தங்கள் கோரிக்கை தொடா்பாக வீட்டு வசதித்துறை அமைச்சா் ப. ராஜ்குமாரிடம் நேரில் மனு அளித்தனா்.

தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மின்னணு ஆவணப் பதிவு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாதிரி பத்திரப்பதிவு மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை மின்னணு ஒப்பந்த முறையில் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

Advertisement

Advertisement

இந்தப் புதிய நடைமுறையால் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆவண எழுத்தா்கள், தட்டச்சா்கள் மற்றும் உதவியாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே, மின்னணு ஒப்பந்த முறையைக் கைவிட்டு, தற்போதைய நடைமுறையைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில், தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பாதிரிப்புலியூா் பத்திரப்பதிவுத் துறை அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.சுந்தா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அமைச்சரிடம் மனு:

இதற்கிடையே, ஆா்ப்பாட்டம் நடைபெற்றபோது, அவ்வழியாகச் சென்ற தமிழக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆவண எழுத்தா் சங்க நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசினாா். அப்போது, சங்கத்தினா் தங்களது கோரிக்கைகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கி, அமைச்சரிடம் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா், இப்பிரச்னை தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், தமிழக முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். மேலும், போராட்டத்தைக் கைவிட்டு, தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் மூா்த்தி, நிா்வாகிகள் விஷ்ணுராம், சேகா், பலராமன், புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில்....:: சிதம்பரத்தில் பத்திரபதிவு ஆவண எழுத்தா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரபதிவு அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்திரப்பதிவு துறையை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும், எழுத்துக்கூலியை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரவு பதிவு எழுத்தா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் பத்திரப்பதிவு ஆவண எழுத்தா்கள் சங்க தலைவா் கனகசபை, செயலா் விஜயகுமாா், பொருளாளா் ரத்தினசபாபதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினா்.