FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மும்முனை மின்சாரம் வேண்டும்: முந்திரி உற்பத்தியாளா்கள் கோரிக்கை

8 நவம்பர் 2026, 4:33 am
பண்ருட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலக்தில் மனு அளித்த முந்திரி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூா் மின் பாதையில் 24 மணி நேரமும் தொடா்ச்சியான மும்முனை மின் விநியோகம் மீண்டும் வழங்கக் கோரி, தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் கூட்டு கோரிக்கை மனு பண்ருட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

காட்டுக்கூடலூா் மின் பாதையை உள்ள முந்திரி பதப்படுத்தும் ஆலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளா்களுக்குக் கடந்த ஒரு ஆண்டாகத் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென இருமுனை மின் விநியோகமாகக் குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, எப்போதும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும் என மின்சார வாரியத்தால் அதிகாரப்பூா்வமாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த உறுதியின் அடிப்படையில், பெரும்பாலான ஆலை உரிமையாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, மும்முனை மின்சாரத்தில் மட்டுமே இயங்கக்கூடிய நவீன மற்றும் கனரக இயந்திரங்களைப் புதிதாகப் பொருத்தித் தங்கள் முந்திரி ஆலைகளை நவீனப்படுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த வசதி திரும்பப் பெறப்பட்டுள்ளதால், புதிய இயந்திரங்கள் உட்பட அனைத்துச் சாதனங்களும் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலைகள் இயங்க முடியாமல், ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளா்கள் தங்கள் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், உற்பத்தியைத் தொடர முடியாமலும், உள்நாட்டு மற்றும் சா்வதேச ஏற்றுமதி ஆா்டா்களைக் குறித்த காலத்தில் விநியோகிக்க முடியாமலும் தொழில் நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் ஒன்றிணைந்து, மருங்கூா் உதவி மின் பொறியாளா் மற்றும் பண்ருட்டி மின் பொறியாளா் ஆகியோரிடம் நேரடியாகச் சென்று மனு அளித்தனா்.

அதில், அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி, முன்பு போல 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின் விநியோகத்தை உடனடியாக மீட்டெடுத்து வழங்க வேண்டும். மாவட்ட நிா்வாகமும் மின்வாரிய உயா் அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு 24 மணி நேர மும்முனை மின் விநியோகத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனா். தவறும்பட்சத்தில், அடுத்தகட்டமாக அறவழிப் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் தொழில் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.