பட்டாசுக் கடை தீ விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
பண்ருட்டி அருகே நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்த கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கருணாமூா்த்தி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் பிரவீன் (25) என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சனிக்கிழமை (நவ.7) ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் கடை உரிமையாளரின் குடும்பத்தினா் மற்றும் பட்டாசு வாங்க வந்தவா்கள் என 7 போ் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த கருணாமூா்த்தி மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement