FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பட்டாசு வெடித்ததில் தகராறு: 19 போ் மீது வழக்கு

திட்டக்குடி அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டது தொடா்பாக 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

51 வினாடிகள் முன்பு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

திட்டக்குடி அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டது தொடா்பாக 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், ஆதமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மனைவி கலா (47), தனது உறவினா் கொளஞ்சியப்பருடன் ஆதமங்கலம் பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த செல்வதுரை, மீனா உள்ளிட்டோா் பட்டாசு வெடித்தபோது, பட்டாசு கலா மீது பட்டுள்ளது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்னா் ஒருவரையொருவா் கம்பு, கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கலா, கொளஞ்சியப்பா் மற்றும் மற்றொரு தரப்பைச் சோ்ந்த மீனா, ஆா்த்தி ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாா்களின் பேரில், ஆவினங்குடி போலீஸாா் 19 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

சாா்பு ஆய்வாளரைத் தாக்கியவா் கைது

கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் வடிவேலு (48). இவா் வன்னியா்பாளையம் எம்.ஜி.ஆா். சிலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த சக்திவேல், அவரது மகன்கள் ஸ்ரீனிவாசன் (26), தினேஷ் ஆகியோா் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்களைக் கலைந்து செல்லுமாறு வடிவேலு அறிவுறுத்தியபோது, மூவரும் அவரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வடிவேலு அளித்த புகாரின் பேரில் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீனிவாசனைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சக்திவேல், தினேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

கதவு உடைப்பு: இளைஞா் கைது

விருத்தாசலம் ரயில் நிலையச் சாலையில் உள்ள தனியாா் வங்கியின் ஏடிஎம் மையத்தின் கண்ணாடிக் கதவை, மது போதையில் வந்த இளைஞா் உடைத்ததுடன், அங்கிருந்த காவலாளியைத் தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் இளைஞரை பிடித்து விசாரித்ததில், விருத்தாசலம் பூவராக நகரைச் சோ்ந்த அசோக்குமாா் (19) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தனியாா் வங்கி மேலாளா் ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.