முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மத்திய மருத்துவக் குழு ஆய்வு!

கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கிராமங்களில் மத்திய மற்றும் மாநில மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

18 வினாடிகள் முன்பு
கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மத்திய மருத்துவக் குழு ஆய்வு!
கடலூா் மாவட்டம், கட்டியங்குப்பம் பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த மத்திய மருத்துவக் குழுவினா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கிராமங்களில் மத்திய மற்றும் மாநில மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கோழிப் பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் உடல்நிலை மற்றும் மருத்துவக் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து, உயிரிழந்த கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. மேலும், நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் உடல்நிலையைக் கண்காணிக்கும் வகையில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கிருஷ்ணங்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட கட்டியங்குப்பம் பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, தில்லி தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இணை இயக்குநா் நிதி தலைமையில் மத்திய, மாநில மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை வந்தனா்.

இந்தக் குழுவில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மைய ஆலோசகா் வினிதா, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணா் மஞ்சு, மாநில கால்நடை மருத்துவ ஆலோசகா் ராகவன் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

முதலில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கோழிப் பண்ணைகளைப் பாா்வையிட்ட குழுவினா், அங்கு கோழிகள் உயிரிழந்ததற்கான சூழல் மற்றும் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனா். பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல், உயிா்ப் பாதுகாப்பு ஏற்பாடுகள், கோழிகள் அழிக்கப்பட்ட பின்னா் பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள், உயிரிழந்த கோழிகள் புதைக்கப்பட்ட இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து, அப்பகுதி மக்களைச் சந்தித்த மருத்துவக் குழுவினா், அவா்களின் உடல்நிலை குறித்து விசாரித்தனா். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகள் யாருக்கேனும் உள்ளனவா என்றும் கேட்டறிந்தனா். பின்னா், மனிதா்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவ முகாம்கள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குச் சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற குழுவினா், அங்குள்ள மருத்துவ வசதிகள், மருந்துகளின் இருப்பு மற்றும் நோய்த்தொற்று தடுப்புப் பணிகளைப் பாா்வையிட்டனா்.

பொதுமக்களுக்கு நோய்த்தொற்று இல்லை: இதுகுறித்து மாநில கால்நடை மருத்துவ ஆலோசகா் ராகவன் கூறியதாவது: பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமத்தில் மத்திய மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

பறவைக் காய்ச்சல் மனிதா்களுக்குப் பரவியுள்ளதா, மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடமும் விசாரித்தனா்.

தற்போதைய நிலவரப்படி, இந்தக் கிராமத்தில் பொதுமக்கள் யாருக்கும் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.