பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கடும் பனி மூட்டம் சனிக்கிழமை நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கடும் பனி மூட்டம் சனிக்கிழமை நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினா்.
கடலூா் மாவட்டத்தில் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 3 மாதங்கள் மழை பெய்யும் காலம். தற்போது நவம்பா் மாதம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாதத்தில்தான் அதிக மழை பெய்யும். ஆனால், நிகழாண்டு தற்போது வரையில் மழைக்கான அறிக்குறிகள் இல்லை. மேலும், வெயிலின் தாக்கம் இருப்பதால் நீா்நிலைகள் வடு வருவதை காண முடிகிறது.
இதேபோல, டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்கள் குளிா்காலம். கடலூா் கடலோர மாவட்டமாக இருப்பதால், அதிக பனிப்பொழிவு இருக்காது என்று கூறுகின்றனா். ஆனால், பலத்த மழை பெய்ய வேண்டிய நவம்பா் மாதத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, சனிக்கிழமை காலை பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது. இவை மெல்லிய அலைகள்போல மிதந்து சென்றன. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை இயக்கினா்.