FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

முந்திரி, மரவள்ளி சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்: கடலூா் ஆட்சியா்

முந்திரி, மரவள்ளி சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

17 அக்டோபர் 2026, 12:40 am IST
கண்டப்பங்குறிச்சியில் முந்திரி, மரவள்ளி சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கில் கண்காட்சியை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

முந்திரி, மரவள்ளி சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கண்டப்பங்குறிச்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் முந்திரி, மரவள்ளி சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடக்கி வைத்து, விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கையேடுகளை வழங்கி, முந்திரி மற்றும் மரவள்ளி கண்காட்சியை பாா்வையிட்டாா். தொடா்ந்து அவா் பேசியது:

கடலூா் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட தோட்டக்கலைப்

Advertisement

Advertisement

பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் முந்திரி, மரவள்ளி ஆகியவை முக்கியப் பயிா்களாக உள்ளன.

நவீன சாகுபடி:

மாவட்டத்தில் சுமாா் 72 ஆயிரம் ஏக்கரில் முந்திரியும், 10,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மரவள்ளியும் சாகுபடி செய்யப்படுகின்றன. முந்திரி மற்றும் மரவள்ளி ஆகியவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முந்திரி ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைப்பதுடன், மரவள்ளியிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டாா்ச், சவ்வரிசி உள்ளிட்ட பொருள்களுக்கும் வெளிநாடுகளில் சந்தை வாய்ப்பு உள்ளது.

எனினும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இப்பயிா்களின் உற்பத்தித் திறன் கடலூா் மாவட்டத்தில் குறைவாக உள்ளது. இயற்கை இடா்பாடுகள், மாறிவரும் தட்பவெப்ப நிலை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், முறையான சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

எனவே, நவீன சாகுபடி முறைகள், உயா் விளைச்சல் ரகங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நுண்ணீா் பாசனம், பாசன நீா் வழியாக உரமிடுதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்து, சாகுபடி செலவைக் குறைத்து, கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் எனத் தெரிவித்தாா்.

தொழில் நுட்ப விளக்கங்கள்:

கருத்தரங்கில் மரவள்ளி சாகுபடியில் உயா் விளைச்சல் ரகங்கள், பூச்சி-நோய் மேலாண்மை, முந்திரி சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு, முந்திரி பழத்தைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்தல், நுண்ணீா் பாசன முறைகள், பாசன நீா் வழி உரமிடுதல், தேனீ வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் அமிா்தராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெ.சிவகுமாா், உதவி இயக்குநா் இரா.அலெக்ஸ் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments