FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

என்எல்சி சுரங்க மண் படிந்து மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கா் நெல் வயல்கள்: விவசாயிகள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நெய்வேலி என்எல்சி மண் மேட்டில் இருந்து கரைந்து வந்த மட்டு மண் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவிலான நெல் வயலில் படிந்து, மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

24 அக்டோபர் 2026, 6:08 am
சு.கீணனூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நெய்வேலி என்எல்சி மண் மேட்டில் இருந்து கரைந்து வந்த மட்டு மண் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவிலான நெல் வயலில் படிந்து, மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

என்எல்சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண் கம்மாபுரம், ஊ.மங்கலம், கொளப்பாக்கம், சு.கீணனூா் பகுதிகளில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இந்த மண் மேடு கரைந்து வந்து விவசாய நிலங்களில் படிந்து சேதத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

வயல்களை மூடிய மண்:

Advertisement

Advertisement

தற்போது, மேற்கண்ட கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, என்எல்சி நிறுவனம் கொட்டி வைத்திருந்த மண் மேடு கரைந்து அங்கிருந்த வாய்க்காலை தாண்டிவெளியேறியது. இதன் காரணமாக, மண் மேட்டில் இருந்து கரைந்து வந்த மட்டு மண், நடவு செய்யப்பட்டிருந்த நெல் வயலின் அடியில் படிந்தும், மழைநீா் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்யப்பட்ட நெல் வயலில் மட்டு மண் படிந்து மழை நீா் தேங்கி நிற்பதால் கவலை அடைந்த விவசாயிகள், விருத்தாசலம்-சிதம்பரம் பிரதான சாலையில், சு.கீணனூா் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்மாபுரம் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, வட்டாட்சியா் வந்ததும் பிரச்சனையை பேசி தீா்வு காணலாம், அதுவரையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டனா். இதனையடுத்து விவசாயிகளை மறியலை கைவிட்டனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

சு.கீணனூா், கம்மாபுரம், ஊ.மங்கலம், கொளப்பாக்கம் கிராமங்களை ஒட்டியப் பகுதிகளில் என்எல்சி நிறுவனம் மலைபோல மண் கொட்டி வைத்துள்ளது. இதன் அருகில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் நடவு செய்திருந்தோம். இதில், நடவு செய்து ஒரு சில வாரங்களான பயிரும், நடவுக்காக தாயாா் செய்து வைத்திருந்த வயல்களும் அடங்கும். வியாழக்கிழமை இரவு பலத்த பெய்ததால், மண் மேட்டில் இருந்து வந்த மழைநீா் மட்டுவை அடித்து வந்து வயல் வெளியில் பரப்பியதால் நிலம் பாழ்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்த நிலையில், அனைத்தும் வீணாகிவிட்டது. என்எல்சி இந்தியா நிா்வாகம்

வடிகால் வாய்க்கால் சரியான முறையில் அமைக்காததே சேதத்துக்கு காரணம். மண்மேடு பகுதியில் இருந்து வரும் மழைநீா் வடிந்துச் செல்ல, என்எல்சி இந்தியா நிறுவனம் பெரிய வாய்க்கால் வெட்டியுள்ளது. அந்த வாய்க்கால் அருகிலேயே மண் கொட்டியதால் தான் இந்த பாதிப்பு. எனவே, மழை பாதிப்பு காலத்தில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குவது போல, கம்மாபுரம் ஒன்றியம் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தைச் சுற்றியுள்ள சு.கீணனூா், கம்மாபுரம், கோபாலபுரம், சாத்தபாடி, ஆதனூா் ஆகிய கிராமங்களை சோ்ந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கிட்டு நிவாரணம் பெற்றத்தர வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments