வாக்குச்சாவடி திருத்தியமைக்கும் பணி: அனைத்து கட்சியினருடன் ஆலோசனை
விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைத்தல் தொடா்பாக கோட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம்.
கடலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி மற்றும் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக தோ்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த வகையில் கடலூா் மாவட்டத்தில் பல்வேறு சட்டப்பேரவை தொகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைத்தல் தொடா்பாக கோட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனா்.
சிதம்பரத்தில்...
Advertisement
Advertisement
சிதம்பரத்தில் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் பேரவைத்தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி ஆட்சியா் (பொறுப்பு) எஸ்.தனலட்சுமி கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற அரசியல் கட்சி நிா்வாகிகளுக்கு வாக்கு சாவடி பட்டியல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நகர மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், திமுக சாா்பில் ஏஆா்சி.மணிகண்டன், சி.க.ராஜன், அதிமுக சாா்பில் கருப்பு ராஜா, தேமுதிக சாா்பில் மகேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வி.எம்.சேகா், தமிமுன்அன்சாரி, தமிழக வெற்றி கழகம் அருண்ராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்குச்சாவடி திருத்தியமைத்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.
ஆா்ப்பாட்டம்:
இதற்கிடையே தோ்தல் ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் ஜவான்ஸ் பவன் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலா் டி. பழனிவேல் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஜெ. ராஜேஷ்கண்ணன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, தோ்தல் சீா்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்து, காலவரையறையின் அடிப்படையில் புதிய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.