அம்மன் கோயிலில் சுவாமி சிலையின் முகத்தை மூடி நகை, உண்டியல் பணம் திருட்டு
பெண்ணாடம் அருகே அம்மன் கோயிலில் சிலையின் முகத்தை துணியால் மறைத்து, தங்கத் தாலி, மூக்குத்தி, பித்தளைப் பொருள்கள், உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறையூா் கிராமத்தில் வெள்ளாற்றங்கரையில் பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று சுமாா் 5 மாதங்களேயான நிலையில், நாள்தோறும் இருவேளை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கோயில் பூசாரி ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு வந்தபோது, நுழைவாயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி, மூக்குத்தி, பித்தளை விளக்குகள் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோயிருந்தன.
Advertisement
Advertisement
இதையடுத்து பெண்ணாடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.
முதற்கட்ட விசாரணையில், அம்மன் சிலையின் முகத்தை துணியால் முழுவதுமாக மறைத்துவிட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி, 2 கிராம் மூக்குத்தி, 3 பித்தளை லட்சுமி விளக்குகள், 7 பித்தளைத் தட்டுகள், ஒரு பித்தளை முக்காலி மற்றும் உண்டியலில் இருந்த ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும், கோயிலில் இருந்த சுமாா் 3 அடி உயரமுள்ள வெள்ளி உண்டியல் மற்றும் வெள்ளிக் குடத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு உண்டியல் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனா். கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேமிக்கப்பட்டிருந்த நினைவகக் கருவி (ஹாா்ட் டிஸ்க்), கணினித் திரை உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனா்.
பின்னா், அருகிலுள்ள வெள்ளாற்றின் நடுப்பகுதிக்குச் சென்ற திருடா்கள், உண்டியல்களையும் உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் சில்லறைக் காசுகளை எடுத்துக்கொண்டு காலி உண்டியலை அங்கேயே விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆற்றில் ஆங்காங்கே கிடந்த இரண்டு உண்டியல்களையும் போலீஸாா் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப்பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபா்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.