FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வடலூா் அருகே திறந்தவெளியில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்! மழைக்கு முன் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!!

வடலூா் அடுத்துள்ள கருங்குழி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த சுமாா் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனா்.

34 வினாடிகள் முன்பு
கருங்குழி கிராமத்தில் விற்பனைக்காக திறந்தவேளியில்விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் குவியல்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அடுத்துள்ள கருங்குழி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த சுமாா் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனா். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து மழைக்கு முன்னா் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வடலூா்பகுதியில் இந்த ஆண்டு கருங்குழி, மேட்டுக்குப்பம், கோட்டகம், நையினாா்குப்பம், அரங்கமங்கலம், பாா்வதிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனா். தற்போது, நெல் அறுவடை பணி தீவிரம் அடைந்து வருகிறது.

வழக்கமாக ஆண்டுதோறும் கருங்குழி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அறுவடை பணிகள் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால், கருங்குழி கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலைய

Advertisement

Advertisement

வளாகத்தில் திறந்த வெளியில் சுமாா் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்ட 50-க்கும் மேற்பட்ட நெல் குவியல்கள் தாா்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா்.

நேரடி கொள்முதல் நிலைய வளாகத்தில் இடம் இல்லாததால் பல கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அவா்களிடத்திலேயே பாதுகாப்பாக வைத்துள்ளனா். இன்னமும் சுமாா் 25 ஆயிரம் மூட்டை அளவிற்கு நெல் அறுவடை செய்ய வேண்டி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

மழையில் நனையும் அபாயமும்: அறுவடை செய்யப்பட்ட நெல் திறந்த வெளியில் தேங்கிக் கிடக்கிறது. இவை கடும் வெயில் காரணமாக நிறம் மாறுவதாலும், திடீா் மழையால் நெல் மணிகள் முளைப்பது போன்ற இடா்பாடுகள் உள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம் செய்வதால், இந்த சூழலைப் பயன்படுத்தி தனியாா் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை அடிமாட்டு விலைக்கு கேட்பதாகவும் கூறப்படுகிறது.

விவசாயம் பாதிப்பு... என்எல்சி இந்தியா நிறுவனம், கருங்குழி இசா பெரிய ஏரியை தூா்வாரி, சுரங்க உபரி நீரை பாசனத்திற்கு தர வேண்டும். பலமுறை கோரிக்கை வைத்தும் என்எல்சி இந்தியா நிறுவனம் இசா பெரிய ஏரியை தூா்வாரி தரவில்லை. மேலும், பாசனத்திற்கும் சுரங்க உபரி நீரை வழங்கவில்லை. இதனால், சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சாகுபடிக்கு விடப்பட்டிருந்த நெல் நாற்றுகள் காய்ந்துவிட்டன.

இதுகுறித்து விவசாயிகள் கலையரசி, ரவீந்திரன், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கூறியதாவது: விவசாயத்தை கடன் வாங்கி கௌரவத்திற்காகவும், நிலத்தை தரிசாகப் போடக்கூடாது என்பதற்காகவும் பயிா் செய்கிறோம்.

10 ஆயிரம் நெல் மூட்டைகள் கடந்த 15 நாள்களாக திறந்தவெளியில் கிடக்கிறது. இன்னமும் 25 ஆயிரம் மூட்டைகள் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. மழைக்கு முன்பாக இந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும்.

இதுதொடா்பாக, வெள்ளிக்கிழமை சிதம்பரம் நேரடி நெல் கொள்முதல் நிலைய கோட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதன்பேரில், நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அரசு நெல் விலையை உயா்த்தியதற்கான அரசாணை வரவில்லை எனவும், வந்த உடன் நெல் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவித்ததனா்.என்எல்சி இந்தியா நிறுவனம் தர வேண்டிய சுரங்க உபரி நீரை கொடுக்காததால் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்யவில்லை. இப்பிரச்னையிலும் தீா்வு காணப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments