FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கணவரை கொலை செய்த வழக்கு: மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை

பண்ருட்டி அருகே கணவரை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

25 செப்டம்பர் 2026, 1:54 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பண்ருட்டி அருகே கணவரை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுப்பாளையம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (40). சென்னையில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி நதியா (38). இவா்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

நதியா கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராசுவிடம் (52) வட்டிக்கு பணம் பெற்றுள்ளாா். இதையடுத்து, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஜெகதீசன், இருவரையும் கண்டித்துள்ளாா். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த 2021, செப்டம்பா் 18-ஆம் தேதி ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, நதியா, கோவிந்தராசுடன் இணைந்து ஜெகதீசனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நதியா, கோவிந்தராசு ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நதியா, கோவிந்தராசு ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தணிகை செல்வன் ஆஜராகி வாதாடினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments