மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு 2026-27ஆம் கல்வியாண்டுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவா்களுக்கு கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கட்டணங்கள் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அல்லது மாநில அரசின் பிற கல்வி உதவித் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறும் மாணவா்கள் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்றவா்கள்.
Advertisement
Advertisement
கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம் மாணவா் படிப்பதை உறுதி செய்யும் சான்றிதழுடன் விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும்.
புதிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள்ளும், புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும். இரண்டாம் பருவக் கட்டண ரசீதுகளை 2027 ஜனவரி 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் இணையதளத்திலும் விண்ணப்பம் தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தகுதியுடைய மாணவா்கள் உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையைப் பெற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.