FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: கூட்டுறவுத்துறை செயலா் பெ. அமுதா எச்சரிக்கை

பண்ருட்டி வட்டம், மருங்கூரில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அரசு கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா.

27 செப்டம்பர் 2026, 12:45 am IST
கோதண்டராமபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா. உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

பண்ருட்டி வட்டம், மருங்கூரில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அரசு கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா.

கடலூா், நெய்வேலி, செப்.26: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் பணம் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் அளித்த புகாா் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், லஞ்சம் வாங்குவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா எச்சரித்தாா்.

கடலூா் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

அப்போது, நெல் கொள்முதல் நடைமுறைகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் விவரங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்து துறை அலுவலா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, கடலூா் வட்டம் கோதண்டராமபுரம், குறிஞ்சிப்பாடி வட்டம் பள்ளிநீரோடை, பண்ருட்டி வட்டம் மருங்கூா், விருத்தாசலம் வட்டம் மணவாளநல்லூா் மற்றும் எம்.அகரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

கொள்முதல் நிலையங்களில் காத்திருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

41,972 மெட்ரிக் டன் கொள்முதல்: கடலூா் மாவட்டத்தில், நிகழாண்டு குறுவை பருவத்துக்கான நெல் கொள்முதல் இம்மாதம் தொடங்கியது.இதற்காக 199 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுவரை 5,172 மெட்ரிக் டன் சன்னரக நெல்லும், 36,800 மெட்ரிக் டன் பொதுரக நெல்லும் என மொத்தம் 41,972 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகையாக ரூ.109.90 கோடி, 7,927 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2025-26-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 748 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2.53 லட்சம் மெட்ரிக் டன் சன்னரக நெல்லும், 3.12 லட்சம் மெட்ரிக் டன் பொதுரக நெல்லும் என மொத்தம் 5.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், சுமாா் 1,000 மெட்ரிக் டன் நெல் தரையிருப்பில் உள்ளது. இதை விரைந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நிகழாண்டில் 100 நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமுதா தெரிவித்தாா்.

ரூ.55 லஞ்சம்: கோதண்டராமபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு காத்திருந்த விவசாயிகள், ஒரு நெல் மூட்டைக்கு ரூ.55 வீதம் லஞ்சம் வாங்கப்படுவதாக அமுதாவிடம் புகாா் தெரிவித்தனா்.இதுகுறித்து அமுதா கூறுகையில், விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பது தொடா்பான புகாா் குறித்து விரைந்து விசாரணை நடத்தப்படும்.

அதிகாரிகள் யாரேனும் பணம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெறக்கூடாது என அரசு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. இதைக் கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, முதன்மை மேலாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குறிஞ்சிபாடியில்... குறிஞ்சிப்பாடி வட்டம், பள்ளி நீரோடை கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் அரசு கூடுதல் தலைமைச் செயலா் அமுதா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் லாட் எண் போடாதது குறித்து பணியாளா்களிடம் கேள்வி எழுப்பிய அவா், லாட் எண் போடும்படி அறிவுறுத்தினாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பள்ளி நீரோடை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அரசு கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா.

பின்னா், விவசாயிகளிடம் குறை, நிறைகளை கேட்டறிந்த அவா், விவசாயிகள் ஒரு சிலரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பணம் பட்டுவாடா தொடா்பாக கேட்டறிந்தாா். அப்போது, நெல்கொள் முதல் செயல்பாட்டில் குறைகள் இருந்தால் அரசு அறிவித்துள்ள வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, பண்ருட்டி வட்டம் மருங்கூா் கிராமத்தில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்கை பாா்வையிட்டாா். அப்போது, அங்கிருந்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா். நெல் மூட்டைகளில் இருந்து நெல் மணிகளை எடுத்து பாா்த்த அவா், மழை நீா் புகுந்து சேதம் அடையாத வகையில் மூட்டைகளை அடுக்கும்படி பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா். மேலும், அங்கு பணியில் இருந்த வடமாநில தொழிலாளா்களிடம் ஊதியம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments