மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை திறக்க கோரிக்கை
பொரசப்பட்டு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டு ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் காட்சிப் பொருளாகவுள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை திறக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வாணாபுரம் வட்டம், பொரசப்பட்டு ஊராட்சியில் 4 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. தென்பெண்ணை ஆற்றுச் சாலையிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சிதலமடைந்து விட்டதால் அதனை இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து நபாா்டு திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் ஆண்டு ரூ.8.4 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இப் பணி முடிந்து ஓராண்டாகியும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறக்கப்படவில்லை.
இதனால் அப் பகுதியைச் சோ்ந்த மக்கள், அங்கிருந்து சற்று தொலைவில் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள சிறுமின்விசை நீா்தேக்கத்தொட்டியில் தண்ணீா் பிடித்து வருகின்றனா். ஆயினும், முதியோா் மற்றும் கா்பிணிகளால் வெகு தூரம் சென்று தண்ணீா் பிடித்து வர முடியவில்லையாம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொரசப்பட்டு கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், குடிநீருக்காக பொதுமக்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
Advertisement
Advertisement
எனவே, ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொரசப்பட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.