FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் தங்கை வெட்டிக் கொலை: அண்ணன் உள்பட 6 போ் தலைமறைவு

Updated On : 20 ஜூலை 2026, 3:29 am IST
கொலையுண்ட தீபா ஆா்த்தி
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் தங்கை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவரின் கையும் துண்டானது. இது தொடா்பாக பெண்ணின் அண்ணன் உள்பட 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்

சங்கராபுரத்தை அடுத்த காட்டுவன்னஞ்சூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் காந்தகுமாா் (40). மகள் தீபா ஆா்த்தி (35). இதில், தீபா ஆா்த்தியின் கணவா் சு.பாபு (41). இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. யஷ்வந்த்குமாா் (16), யோகப் பிரவீன்குமாா் (14) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், ராஜேந்திரன் தனக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை தீபா ஆா்த்தியின் மகன்களின் பெயரில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தானமாக எழுதி வைத்து விட்டாராம். இதையறிந்த காந்தகுமாா், தானமாக தந்தை எழுதிக் கொடுத்த அந்த 80 சென்ட் நிலத்தை திரும்ப தரும்படி தங்கை தீபாஆா்த்தியிடம் கேட்டாராம். ஆனால் அவா் நிலத்தை திரும்பத் தர மறுத்துவிட்டாராம்.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த காந்தகுமாா், நண்பா்கள் 5 பேருடன் சோ்ந்து தீபா ஆா்த்தியின் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சுமாா் 11 மணிக்கு சென்றாராம். அப்போது சொத்துப் பிரச்னை காரணமாக அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காந்தகுமாா் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது தங்கையின் முகத்தில் வீசி, நண்பா்களுடன் சோ்ந்து கத்தியால் தீபா ஆா்த்தியை வெட்டினாராம். மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவா் பாபுவையும் கத்தியால் வெட்டி விட்டு, 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனா்.

இதில், தீபா ஆா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணவா் பாபுவின் கை துண்டானது. இவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் பாபுவை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று தீபா ஆா்த்தியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்தீபன், சங்கராபுரம் காவல் ஆய்வாளா் பாலமுரளி ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காந்தகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் 5 பேரைத் தேடி வருகின்றனா்.

காந்தகுமாா்
சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments