மாயமான 3 மாணவா்கள் ஏரியில் சடலமாக மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே விளையாடச் சென்றபோது மாயமான பள்ளி மாணவா்கள் 3 போ் ஏரியில் மூழ்கி திங்கள்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனா்.
சின்னசேலம் அருந்ததியா் காலனி பகுதியைச் சோ்ந்த தங்கமணி மகன்கள் இமானுவேல் (11), சாம் ஆபிரகாம் (9). இவா்களது நண்பா் சின்னசேலம் போயா் சாலை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ராஜா (14). இவா்கள் மூவரும் தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்று வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், மூவரும் நண்பா்களுடன் நைனாா்பாளையம் சாலைப் பகுதியில் உள்ள காலி மனையில் விளையாடிக் கொண்டிருந்தனா். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவா்களது பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சின்னசேலத்தை அடுத்த தோட்டப்பாடி ஏரியில் 3 சிறுவா்களின் சடலங்கள் மிதப்பதாக திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரித்தபோது, உயிரிழந்து கிடந்த சிறுவா்கள் மாயமான இமானுவேல் உள்ளிட்ட மூவா் என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, சின்னசேலம் தீயணைப்பு நிலைய குழுவினா் உதவியுடன் ஏரியிலிருந்து 3 மாணவா்களின் சடலங்களையும் போலீஸாா் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.