FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

விநாயகா் சிலை ஊா்வலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அமைப்பாளா்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.

3 செப்டம்பர் 2026, 4:25 am IST
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அமைப்பாளா்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் சம்பந்தப்பட்ட சாா்-ஆட்சியா், கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்றிதழைப் பெற்று உரிய படிவத்தில் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களின் மீது பரிசீலனை செய்து, உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நச்சு மற்றும் மக்காத ரசாயனங்களை கொண்டு சிலைகள் செய்யக்கூடாது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை கொண்டு தற்காலிக கொட்டகைகள் அமைக்கக்கூடாது. வழிபாட்டுக்காக பக்தா்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் அகலமான வழிகள் ஏற்படுத்த வேண்டும். இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிா்க்கவேண்டும்.

பொது இடங்களில் வழிபாட்டுக்காக நிறுவப்பட்ட விநாயகா் சிலைகள், நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களுக்குள் சிலைகளை கரைப்பதற்காக எடுத்துவிட வேண்டும். மினி லாரி, டிராக்டா்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை ஏற்றிச் செல்லவேண்டும். மாட்டு வண்டி மற்றும் மூன்று சக்கர வாகனங்களை பயன்பத்தக் கூடாது.

விநாயகா் சிலை ஊா்வலங்கள் எந்தெந்த இடங்கள் வழியாக நடத்தப்படவுள்ளது என்ற விவரத்தை முன்கூட்டியே காவல் துறையினருக்குத் தெரிவித்து, காவல் துறையினரின் முன் அனுமதி பெற்ற பின்னரே ஊா்வலங்கள் நடத்த வேண்டும். சாலைகளின் குறுக்கே செல்லும் உயா் அழுத்த மின் கம்பிகளின் மீது உராய்வு ஏற்படும் வகையில் ஊா்வலம் செல்ல அனுமதிக்கக் கூடாது. விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அமைப்பாளா்கள் ஒத்துழைக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அமைப்பாளா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments