வேளாண் அறிவியல் நிலையத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
பணி நிரந்தரம் கோரி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத் தொழிலாளர்கள் நிலைத்துக்குள் இருந்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் கோரி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத் தொழிலாளர்கள் நிலைத்துக்குள் இருந்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம், மாதூர் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கடந்த 15 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் 60 பேர் வேலை செய்கின்றனர்.
இவர்களில் சிலருக்கு புதுச்சேரி அரசு பணி நிரந்தர ஆணையை அண்மையில் வழங்கியது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக பணி நிரந்தரம் பெறாதவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதுச்சேரி அரசைக் கண்டிக்கும் வகையில் அவர்கள் வியாழக்கிழமை நிலையத்துக்குள் இருந்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு நியமனத்தின்படி புதிதாக பணியில் சேர வந்தவர்களையும் போராட்டக்காரர்கள் தடுத்தனர். இதுகுறித்து பணியில் சேர வந்தவர்கள் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி ஊழியர் சங்கத் தலைவர் ஜீவானந்தம் கூறியது:
கடந்த 15 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் வேளாண் அறிவியல் நிலையத்தில் 60 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் 32 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி நிரந்தரம் செய்யும்போது பணி மூப்பு பின்பற்றப்படவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது.
மீதமுள்ளவர்களையும் பணி நிரந்தரம் செய்ய புதுச்சேரி அரசைக் கண்டித்து அலுவலகத்துக்குள் இருந்தபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். தேர்தலை மனதில் கொண்டு புதிதாக ஆள்களை நியமிக்கின்றனர். இது ஏற்புடையதல்ல என்பதால் புதிதாக வந்தவர்களைத் தடுக்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.