FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதுச்சேரி மீனவக் கிராமத்தில் சுனாமி ஒத்திகை

புதுச்சேரி அருகே நல்லவாடி மீனவக் கிராமத்தில் சுனாமி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

புதுச்சேரி அருகே நல்லவாடி மீனவக் கிராமத்தில் சுனாமி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
 புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), ஹைதராபாத் இன்காய்ஸ் ஆகியவை இணைந்து இந்தியப் பெருங்கடலுக்கு உள்பட்ட கடலோர மாநிலங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
 இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்கு உள்பட்ட தவளக்குப்பம் அருகேயுள்ள நல்லவாடி மீனவக் கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடத்தப்பட்டது.
 இதன்படி, காலை 8.20 மணிக்கு இந்தோனேசியா சுமத்ரா தீவில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து, லாஸ்பேட்டை அவசர கால பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நல்லவாடு கடலோரப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 இதையடுத்து, அங்கிருந்த மக்கள் அனைவரும் வாகனங்கள் மூலம் அருகில் உள்ள அரசுக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டன.
 கடலில் மூழ்குவது போல நடித்தவர்களையும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, உயரமான கட்டடத்தில் இருப்பவர்களை மீட்பது, இடிபாடுகளை அப்புறப்படுத்துவது போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
 சுனாமி ஒத்திகையினால் நல்லவாடு கிராமத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால், அந்தப் பகுதி இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்புடன் காணப்பட்டது.
 இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை, மீன்வளத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் ஈடுபட்டனர்.
 மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செüத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments