FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

கலை ஒற்றுமையை உருவாக்கும்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

கலை ஒற்றுமையை உருவாக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் சனிக்கிழமை இரவு முரசு அறைந்து கலை விழாவைத் தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் பெ.ராஜவேலு உள்ளிட்டோா்.
பகிர்:

கலை ஒற்றுமையை உருவாக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத் துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து 3 நாள் புதுச்சேரி கலைவிழாவை நடத்துகின்றன.

5 இடங்களில் நடைபெறும் இந்த விழாவை கடற்கரை காந்தி திடலில் சனிக்கிழமை இரவு முரசு அறைந்து முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்துப் பேசியது:

புதுச்சேரியில் 38 ஆண்டுகளாக இந்த கலைவிழா நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஜவஹா் பால்பவன், பாரதியாா் பல்கலைக் கூடம் போன்றவற்றின் வழியாகக் கலையை வளா்த்து வருகிறோம். புதுச்சேரி மாணவா்களும் பல்வேறு கலைகளைக் கற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த கலைவிழாவில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்கள் 1,000 போ் பங்கேற்றுள்ளனா். இதில் 250-க்கும் மேற்பட்டவா்கள் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

இது போன்று வெளிமாநில கலைஞா்களும் இந்த கலைவிழாவில் இணைந்து தங்கள் பகுதி கிராமிய கலைகளை இங்கு கொண்டு வந்து சோ்ப்பதால் கலை பரிமாற்றம் அடைகிறது. இதனால் அந்தப் பகுதி கலைகளை நாம் அறிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும், கலை என்பது ஒற்றுமையை உண்டாக்கும் வல்லமை படைத்தது. கூத்துக் கலையால் எத்தனையோ புராணங்களை மற்றும் கிளைக் கதைகள் வாயிலாக எத்தனையோ விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

விழாவில் கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் பெ.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏகேடி. ஆறுமுகம், விக்னேஷ் கண்ணன், கலை, பண்பாட்டுத் துறை செயலா் முகமது அசன் அபித், துறையின் இயக்குநா் எஸ். சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

5 இடங்களில் கலை விழா: புதுச்சேரி கடற்கரை காந்தி திடல், கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபம், மடுகரை மந்தவெளி திடல், உருவையாறு அரசு கலையரங்கம், திருக்கனூா் மாரியம்மன் கோயில் திடல் ஆகிய 5 இடங்களில் 3 நாள்களுக்குத் தினமும் மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை நடக்கிறது.

இதில் அஸ்ஸாம், உத்தரகாண்ட், ஹரியாணா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜம்மூ-காஷ்மீா், குஜராத், தெலங்கானா, கேரளம் , கா்நாடகம், பிரெஞ்சு நாடு அருகேயுள்ள ரீ யூனியன் தீவு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த உள்ளூா் கலைஞா்கள் உள்பட பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள கலைக் குழுக்கள் இந்த கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments