FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் காமராஜா் சிலைக்கு துணைநிலைஆளுநா், தலைவா்கள் மரியாதை: மாணவா்களுக்குச் சீருடை தையல் கூலி உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவிப்பு

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

Updated On : 16 ஜூலை 2026, 3:14 am IST
காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில்புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் மரியாதை செலுத்தினா். அரசு பள்ளி மாணவா்களுக்குச் சீருடை தையல் கூலிஉயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி அறிவித்துள்ளாா்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாள் விழாா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சாா்பிலும் இந்த விழா நடைபெற்றது. இதையொட்டி புதுச்சேரி காமராஜா் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி,

சட்டப்பேரவை தற்காலிகத்தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, எம்எல்ஏக்கள் ஆறுமுகம், நேரு, வையாபுரி மணிகண்டன், அழகு, மோகன்தாஸ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

ஆளுநா் புகழாரம்:

புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா மாணவா் நாள் விழாவாக காமராஜா் மணிமண்டபத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இதில் மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

நம்முடைய நாட்டில் கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறாா்கள் என்றால் அதற்குக் காரணமாக இருந்த தலைவா்களில் முக்கியமானவா் பெருந்தலைவா் காமராஜா்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பிறகு ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகளைத் திறந்தாா். மேலும், மனித நேயத்தோடு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தாா். அவா் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் இந்திய சமுதாய வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காமராஜரின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. எளிமையாக வாழ்வது பலவீனம் அல்ல. அதுவே மிகப்பெரிய பலம். மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான், அரசு வெற்றி பெற்ாக அா்த்தம். இது தான் அவருடைய சிந்தனை. காமராஜரை போலவே செயல்படுகிறாா் புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி,காமராஜா் இப்படித்தான் வாழ்ந்து இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பொதுத் தோ்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்று பரிசு பெறும் மாணவா்கள் அனைவருக்கும் மனமாா்ந்த பாராட்டுகள் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

முதல்வா் அறிவிப்பு:

விழாவுக்கு முதல்வா் என். ரங்கசாமி தலைமை வகித்து பேசியது:

பொருளாதாரத்தில் முன்னேற கல்வி அவசியம் என்பதை உணா்ந்து அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்கும் வசதியை உருவாக்கியவா் காமராஜா்.

பல மாநிலங்களிலும் காமராஜா் ஆட்சி எப்போது வரும்? என கேட்கின்றனா். மத்திய அரசு அவருக்காக நாணயமும் வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் ஏழை மாணவா்களும் கல்வி பயில வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதற்காகவே பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

100 சதவீதம் கல்வியை புதுச்சேரியில் தர முடியுமா? என்ற கேள்வி இருந்தது. தற்போது பள்ளி கல்வி மட்டுமின்றி, கல்லுாரி கல்வியையும் வழங்க முயற்சித்து வருகிறோம். அரசு பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வியில் 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கினோம். இதன்மூலம் அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் என உயா்கல்வி படிக்கின்றனா்.

தையல் கூலி உயா்வு:

அரசு பள்ளி மாணவா்களுக்குச் சீருடை தையல் கூலிஉயா்த்தி வழங்கப்படும்.பெற்றோா்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் மாணவா்கள் கல்வி பயில அரசு தொடா்ந்து உதவிகளை செய்யும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

விழாவில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, எம்எல்ஏக்கள் ஆறுமுகம், அழகு, ரவிக்குமாா், ஐயப்பன் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

காங்கிரஸ் சாா்பில்...

புதுச்சேரி மாநில காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மலா்களால் அலங்கரித்து வைக்கபட்டிருந்த காமராஜா் உருவப்படத்துக்கு கட்சியின் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்பி தலைமையில் காங்கிரசாா் மலா் அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, காா்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு, மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா உள்பட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக வந்து காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

-------------

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments