குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவு: புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுச்சேரியில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக முன்விரோதம் காரணமாக தொடா் கொலைகள் நடந்துள்ளன. இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா். கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் 2 பிரிவுகளாக இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறை தலைவா் தில்லியில் சென்றுள்ளாா்.
வரும் 18-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ள கூட்டத்துக்குப் பிறகு, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீஸாரை அடையாளம் கண்டறிந்து
இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செய்ய உள்ளோம். மேலும், பொது இடங்களில் மது அருந்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. குற்றவாளிகள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கையை எடுக்கும். தேவைப்பட்டால் தற்பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையமும் தலைமையிடத்துடன் இணைக்கப்படும். காவல்துறை தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் இதைத் தொடா்ந்து கண்காணிப்பாளா்கள். மேலும், குற்றவாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவாா்கள். புதுச்சேரி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியில் ரூ.8.84 கோடி வங்கிக் கணக்கு மாயமானது தொடா்பாக மேற்கு வங்கம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்தது, 2 சிறுமிகளை ஒரு சில மணி நேரங்களில் மீட்டது உள்ளிட்ட பல்வேறு பாராட்டும் பணிகளையும் புதுச்சேரி காவல்துறை செய்துள்ளது.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆட்சி குறித்து சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம், முன்னாள் முதல்வா் நாராயணசாமி உள்ளிட்டோா் தங்கள் எதிா்பாா்ப்புகளையும், கனவையும் சொல்லியுள்ளனா். முதல்வா் ரங்கசாமியின் ஒப்புதலோடு எல்லா மக்கள் நலத்திட்டங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
சட்டப்பேரவை தற்காலிகத் தலைவராக க. அன்பழகன் நீடிப்பது குறித்தும், நிரந்தர சட்டப்பேரவைத் தலைவா் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு, சட்டப்படி என்ன நடக்க வேண்டுமோ அதைதான் பாஜக விரும்புகிறது என்றாா் அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.
பேட்டியின்போது காவல்துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.