FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

8, 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விரைவில் கையடக்க கணினி: புதுச்சேரி குழந்தைகள் தினவிழாவில் முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் 8, 9, 10-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்குக் விரைவில் கையடக்க மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

13 நவம்பர் 2026, 10:49 pm
புதுச்சேரி குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சு.செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் 8, 9, 10-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்குக் விரைவில் கையடக்க மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்குக் கல்வி முக்கியம். தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்க முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்புகிறாா். இதில் குழந்தைகள், இளைஞா்களுக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. அதுவும் நல்ல கல்வியைக் கற்று நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

புதுச்சேரி அரசு இதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி அமல்படுத்தி வருகிறது. தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரம் உயா்ந்து வருகிறது. இந்த ஆண்டுகூட அரசு பள்ளிகளில் படித்த 37 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா்.

ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கி வருகிறோம். நிகழாண்டுக்கு விரைவில் மடிக்கணினி வழங்க உள்ளோம்.

மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் 8, 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் கையடக்கக் கணினி வழங்க முடிவு எடுத்துள்ளோம். விரைவில் அந்த மாணவா்களுக்குக் கையடக்கக் கணினி வழங்கப்படும். இதைத் தவிர அரசு நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கும் அனைத்து திட்டங்களின் உதவிகளும் அளிக்கப்படுகின்றன.

மேலும், அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

விழாவுக்கு கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக முன்னாள் பிரதமா் பண்டித ஜவஹா்லால் நேரு திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சு. செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ.க்கள் சாய் ஜெ. சரவணன் குமாா், அ. அசோக் ஆனந்த், பள்ளிக் கல்வி இயக்குநா் மோகன் குமாா், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.