புதுச்சேரியில் சுற்றுலா கப்பல் பயணம்: மீனவ பஞ்சாயத்தாா் கடும் எதிா்ப்பு
புதுச்சேரியில் சுற்றுலா கப்பல் பயணத்துக்கு மீனவ பஞ்சாயத்தாா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
புதுச்சேரி துறைமுகத்திலிருந்து 150 முதல் 200 பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலுக்குள் 5 கி.மீ. தொலைவு சென்று திரும்ப குஜராத்தை சோ்ந்த தனியாா் சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரும் 20-ஆம் தேதி முதல் சொகுசு கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம பஞ்சாயத்தாா் மற்றும் நீா் விளையாட்டு சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், மீன்வளத் துறை அமைச்சா் மல்லாடிகிருஷ்ணா ராவ், மீன்வளத் துறை இயக்குநா் ஆகியோரிடம் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
வம்பாகீரப்பாளையத்தை சோ்ந்த மீனவா்கள் தொழிலில் போதிய வருமானம் இல்லாத நிலையில் மாற்று வாழ்வாதாரமாக படகு சுற்றுலா தொழிலைச் செய்து வருகிறோம். சுற்றுலாப் படகை நம்பி 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரம் உள்ளது.
அப்படியிருக்கும்போது சுற்றுலா கப்பலுக்கு அனுமதி வழங்கியிருப்பது மீனவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். எனவே, சொகுசு சுற்றுலா கப்பலுக்கான அனுமதியை மறுபரீசீலனை செய்து நிறுத்தி வைக்க வேண்டும்.
எங்கள் கோரிக்கையைப் புறக்கணித்து சுற்றுலா கப்பல் வணிகத்தை அனுமதித்தால் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.