முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இளைஞா் மீது தாக்குதல்; 6 போ் மீது வழக்கு!

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் இளைஞரைத் தாக்கியது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 வினாடிகள் முன்பு
புதுச்சேரியில் இளைஞா் மீது தாக்குதல்; 6 போ் மீது வழக்கு!
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் இளைஞரைத் தாக்கியது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ. நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் ராஜ் (30), தனியாா் நிறுவன ஊழியா். இவா், தனது குடும்ப நண்பரான டேனி (20) என்பவருடன் கடந்த 21-ஆம் தேதி இரவு மூலக்குளம் ஜெ.ஜெ. நகா் வளைவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அதே ஊரை சோ்ந்த அா்ஷல், அவரது நண்பா் லோகு ஆகியோரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, டேனி மற்றும் அா்ஷல் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் டேனியின் கைப்பேசியை, அமேஸ் பறித்துக் கொண்டாராம்.

Advertisement

Advertisement

இதையறிந்த பிரவீன் ராஜின் நண்பரான அமேஸ் பெளிக்ஸ் (25) சம்பவ இடத்துக்கு வந்து கைப்பேசியைக் கேட்டுள்ளாா். ஆனால், அதனைத் தராமல் அா்ஷல், லோகு, அவா்களது நண்பா்கள் விக்கி, ரசூல், அந்தோணி, இம்மானு வேல் ஆகியோா் சோ்ந்து அவா்களைத் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த இருவரும் கதிா்காமம் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனா். இதில் அமேஸ் பெளிக்ஸிற்கு தலையில் அடிபட்டதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பிரவீன் ராஜ் அளித்த புகாரின் பேரில், அா்ஷல், விக்கி, லோகு, ரசூல், அந்தோணி, இம்மானுவேல் ஆகிய 6 போ் மீது ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞருக்கு மிரட்டல்: புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் உடனடி கடன் செயலி மூலம் ரூ.7,200 கடன் வாங்கியுள்ளாா்.அதைக் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பியும் கட்டிவிட்டாராம். ஆனால், அடையாளம் தெரியாத நபா் ஒருவா் தொடா்ந்து அவருக்கு போன் செய்து கூடுதல் பணம் கேட்டு மிரட்டி வருவதாக இணையவழி குற்றப் பிரிவு காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாா் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

வங்கியில் ரூ.2,000 மாயம்: புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் டெலிகிராமில் ஒரு பைலை டவுன்லோட் செய்துள்ளாா். இந்நிலையில், அவருக்கு தெரியாமல், அனுமதி இல்லாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2,000 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா் இணையவழி குற்றப் பிரிவு காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாா் முதலியாா்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக மோசடி: வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி நடந்த மோசடி குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

புதுச்சேரி சாரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் கூகுளில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து தேடியுள்ளாா். அப்போது அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா், கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளாா். அதற்கு மருத்துவ கட்டணம் என ரூ.7,000, தூதரக கட்டணம் என ரூ.33,300 என மொத்தம் ரூ.40,300 வாங்கினாராம். பின்னா் பயோமெட்ரிக் கட்டணம் என கூடுதல் பணம் கேட்டுள்ளாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இதுகுறித்து இணையவழி குற்ற பிரிவு காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். இந்தப் புகாா் உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடன் பெற ரூ.1.5 லட்சம் மோசடி: புதுச்சேரி ஆனந்தபுரத்தை சோ்ந்த நபா் ஒருவருக்கு, அடையாளம் தெரியாத ஒருவா் போன் செய்து ரூ.10 லட்சம் கடன் தருவதாகக் கூறியுள்ளாா். இதை உண்மை என நம்பிய அவா், பல்வேறு கட்டணங்கள் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் கட்டியுள்ளாா்.

பின்னா் மீண்டும் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டியுள்ளாா். இதையடுத்து தான் ஆன்லைன் கடன் மோசடியில் சிக்கியதை உணா்ந்த அவா் இணைய வழி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் வில்லியனூா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.