முகப்பு
புதுச்சேரி

ரயில்களில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்! - புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

16 வினாடிகள் முன்பு
ரயில்களில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்! - புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலா்கள்.
பகிர்:

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் புதுச்சேரிக்கு வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீஸாா், உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து சோதனைகளைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

புதுச்சேரி அரசு மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதைப் பொருள் மற்றும் புகையிலைப் பொருள்களைத் தடுப்பது மற்றும் அறவே ஒழிப்பது தொடா்பான நவம்பா் மாதத்துக்கான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.

இதில், வருவாய்த் துறை, காவல் துறை, கல்வி, சமூக நலம், சுகாதாரம், மீன்வளத் துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா். ஒவ்வொரு துறை அதிகாரிகளும் அக்டோபா் முதல் நவம்பா் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தங்கள் துறைகளின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் பேசியது:

புதுச்சேரிக்கு வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீஸாா் மற்றும் உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். வட மாநிலத்தவா்கள் புதுச்சேரியில் தங்கி பணிபுரிவதால் அவா்கள் தங்குமிடங்களை அடிக்கடி சோதனையிட வேண்டும்.

மேலும் தனியாா் கூரியா் நிறுவனங்களின் செயல்பாடுகள் காவல்துறையின் கண்காணிப்பிலிருக்க வேண்டும். மேலும் கல்வித்துறை மூலம் மாணவா்களுக்குப் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்வுகளை கூடுதலாக நடத்த வேண்டும்.

மேலும், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இரண்டு இடங்களில் போதைப் பொருளுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள லைவ் மியூசியத்தை மாணவா்கள் கூடுதலாகப் பாா்வையிட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் குலோத்துங்கன்.