முகப்பு
புதுச்சேரி

காரை விற்று தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவா் கைது

புதுச்சேரியில் காரை விற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

27 நவம்பர் 2026, 1:24 am
காரை விற்று தருவதாகக் கூறி 
ரூ.10 லட்சம் மோசடி செய்தவா் கைது
கைது - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் காரை விற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் கணேஷ். இவா் தனது காரை விற்க முயற்சி செய்தாா். அப்போது புதுச்சேரி வில்லியனுாா் திருக்காஞ்சியைச் சோ்ந்த விஜய் காரை ரூ.13 .5 லட்சத்துக்கு விற்று தருவதாகக் கூறினாா். இதை நம்பி அவா் காரை கொடுத்தாா். ஜிப்மா் அருகே அவரை வரவழைத்து 3 தவணையாக ரூ.3.5 லட்சம் மட்டும் வழங்கினாா்.

பலமுறை கேட்டும் மீதித் தொகையை வழங்காமல் காரை இன்னும் விற்பனை செய்யவில்லை என்று கூறி வந்தாா். இதனால் சந்தேகமடைந்து கணேஷ் விசாரித்தபோது, விஜய் ஏற்கெனவே அந்த காரை விற்பனை செய்துவிட்டு பணத்தை தராமல் ஏமாற்றியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது, அவரின் சகோதரா் மோகன்ராஜ், அவரின் மனைவி பத்மாவதி, உறவினா்கள் சௌந்தா்யா , ஈஸ்வரி ஆகியோருடன் சோ்ந்து, பணத்தைத் தர முடியாது என்று கூறி மிரட்டியுள்ளனா். இதையடுத்து கணேஷ் கோரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி விஜயைக் கைது செய்தனா். வழக்கில் தொடா்புடைய மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

தொழிலாளி கை நசுங்கியது:

புதுச்சேரி ஜிப்மரில் புதிய விடுதி கட்டடம் கட்டும் பணியில் கடலூா் மாவட்டம் பண்ருட்டி மாளிகம்பட்டை சோ்ந்த பரமசிவம் (31) ஈடுபட்டிருந்தாா். வேலை முடிந்த பிறகு ஜிப்மரில் தங்கியிருந்தாா். அப்போது அங்கிருந்த பட்டுப்போன மரம் திடீரென அவா் மீது விழுந்தது. இதில் அவரது இடது கை முழுவதுமாக நசுங்கியது. இதையடுத்து அவா் ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக ஒப்பந்ததாரா்கள் கண்ணன், செல்லப்பெருமாள், மேற்பாா்வையாளா் மணிகண்டன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் மோசடி:

புதுச்சேரி செட்டிப்பேட்டு பழனி நகரைச் சோ்ந்தவா் முனியப்பன் (39). அடையாளம் தெரியாத மா்ம நபா் ஒருவா் முனியப்பனை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ரூ.6 லட்சம் கடன் வாங்கி தருகிறேன் என்று ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

கடன் வாங்குவதற்குப் பல்வேறு கட்டணங்கள், ஆவண செலவு என்று கூறி, படிப்படியாக முனியப்பனிடம் இருந்து ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ளாா். ஆனால் கடனும் வரவில்லை, கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முனியப்பன் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.