FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆவடியில் கணவனை இழந்த பெண்ணிடம் ரூ. 21 லட்சம் மோசடி: இளைஞர் கைது!

ஆவடியில் கணவனை இழந்த பெண்ணிடம் ரூ. 21 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தது குறித்து...

16 வினாடிகள் முன்பு
கைது செய்யப்பட்ட ராஜேஷ்குமார். - படம் - தினமணி
பகிர்:

ஆவடியில் கணவனை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ரூ.21 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஆவடி கோவர்த்தனக்கிரியைச் சேர்ந்த 40 வயது பெண், கணவர் இறந்த நிலையில், 16 வயது மகன், 8 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (37) என்பவர் அறிமுகமானார். இவர், தான் தனியாக வசித்து வருவதாகவும், மனைவியுடன் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபராக இருப்பதாகவும் கூறி அப்பெண்ணிடம் நம்பிக்கை ஏற்படுத்தினார். தொடர்ந்து, அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நிதி நெருக்கடி மற்றும் குடும்பச் செலவு எனக்கூறி பணம் கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அப்பெண், தன்னிடம் உள்ள நகைகள், குழந்தைகளுக்கு சேமித்து வைத்த பணம் மற்றும் வீட்டை அடமானம் வைத்து சிறுக சிறுக ரூ. 21 லட்சம் பணத்தை ராஜேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே, அப்பெண்ணின் கணவர் எனக்கூறி ராஜேஷ் குமார், அப்பெண்ணின் ஆதார் அட்டையில் திருத்தம் செய்துள்ளார். அந்த ஆதார் அட்டை ராஜேஷ்குமாரின் மனைவியின் முகவரிக்கு சென்றது. அதில் உள்ள கைப்பேசி எண்ணை வைத்து, அவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு ராஜேஷ்குமார் தன்னுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அவருக்கு தெரியாமல் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, அவற்றை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் த. செந்தில்குமாரைச் சந்தித்து கடந்த ஜூலை மாதம் அப்பெண் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஆவடி குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து கார், ஐ - பேட், 2 கைப்பேசிகள் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி ராஜேஷ்குமார் ரூ. 40 லட்சம் பெற்று ஏமாற்றியதாகவும், இவர் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களை ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

summary

In Avadi, police have arrested a young man for swindling Rs. 21 lakh from a widow after promising to marry her.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.