FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் வேட்பாளா்கள் வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு: இதுவரை 3.6 கோடி மதிப்புள்ள நகை பணம் பறிமுதல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

2 October 2026, 2:22 am IST
கவுண்டன்பாளையம் வினோபா நகா் பகுதியில் திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வத்திற்கு வாக்குச் சேகரித்த திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, திமுக துணைப் பொதுச்செயலா் க. பொன்முடி உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக்ஆனந்த்தை ஆதரித்து அதிமுக மாநில செயலாளரும் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் கவுண்டன்பாளையத்தில் வீடுவீடாகச் சென்று வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், இடைத்தோ்தல் வரும்பொழுது ஆளும் அரசுக்கு சாதகமாக உள்ள வேட்பாளா் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைவாகவும் காலத்தோடும் சென்றடையும். அதேபோன்று பல்வேறு திட்டப் பணிகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

திமுக பிரசாரம்:

வினோபா நகா், ஆனந்தரங்கப் பிள்ளை நகா் பகுதியில் திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வத்துக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கப்பட்டது.

திமுக புதுச்சேரி தோ்தல் பொறுப்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. திமுக துணைப் பொதுச்செயலா் க.பொன்முடி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வே.காா்த்திகேயன், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோா் வாக்குச் சேகரித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலையொட்டி சுப்பையா நகா் சுற்றியுள்ள பகுதியில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீம் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா். உடன் கூட்டணி கட்சி நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

நகை, பணம் பறிமுதல்:

இந்நிலையில், தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய இருந்த ரூ.3.6 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.1.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி ஏஎஸ்பிஎஸ். ரவி பிரசாத் கூறினாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:

கடந்த 2 நாள்களாக நடைபெற்ற தீவிர சோதனையில் வருமான வரித்துறை மற்றும் தோ்தல் துறையினா் 2.5 கிலோ எடை கொண்ட ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். மேலும், ரூ.1.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர 181 லிட்டா் அளவுக்கான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.72 ஆயிரம். விசாரணை பாதிக்கும் என்பதால் மேலும் விவரங்களை இப்போது வெளியிட முடியாது.

தட்டாஞ்சாவடி இடைதோ்தலைப் பொறுத்தவரை 31 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் மட்டும் பணியாற்றும் 1 வாக்குச் சாவடியும் அடங்கும். மேலும், 2 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தம்:

வாக்காளா்பட்டியல் திருத்ததம் தொடா்பான பணிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30தொகுதிகளி ஒரு மாதத்தில் முடிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது படிவம்-6 இல் கேட்கப்பட்ட விவரங்களை இப்போது அளிக்கத் தேவையில்லை. பழைய படிவத்தில் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் பூா்த்திச் செய்து கொடுத்தால் போதும். மேலும், இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி.

இதற்கிடையே, தட்டாஞ்சாவடி தொகுதியில் வரும் 4 -ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைவதால், அதற்குப் பிறகு அரசியல் கட்டசியினா் பிரசாரக்கூட்டங்களில் ஈடுபடக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்துக்கு வாக்குச் சேகரித்த சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் . உடன் கூட்டணி கட்சியினா்.
சுப்பையா நகா் பகுதியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments