தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. நம்பிக்கை
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தாா்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியின்போது கூறியது:
பொதுத் தோ்தலின்போது கூட்டணி கட்சிகள் வேலை செய்யவில்லை. இப்போது இடைத்தோ்தலில் நல்ல கூட்டணி அமைந்துள்ளது. மேலும், கூட்டணி கட்சிகளும் சிறப்பாக வேலை செய்து வருகின்றன. இதனால் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த இடைத் தோ்தல் பிரசாரத்துக்காக தமிழக அமைச்சா்கள் 2 போ் வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சோ்ந்த 2 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். இந்த கொலைக்கான காரணத்தை புதுச்சேரி அரசு இதுவரை கண்டுபிடிக்கவில்லை. காவல் துறையில் ஓா் ஆராய்ச்சிப் பிரிவை அமைக்க வேண்டும். இந்தப் பிரிவு இது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து பல முறை தோ்ந்தெடுக்கப்பட்டவா்தான் முதல்வா் ரங்கசாமி. அவா் அந்தத் தொகுதிக்கு எந்த வளா்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அந்தத் தொகுதி மக்களை அவா் ஏமாற்றியுள்ளாா். அந்த ஏமாற்றத்திலிருந்து விடுபட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும்.
சட்டத்தைப் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து சட்டப்பேரவைத் தலைவராக இருப்பவா்கள் எந்த வேட்பாளருக்கும் பிரசாரம் செய்வதில்லை என்பது மரபு.
ஆனால், கடந்த ஆட்சியில் இருந்த சட்டப்பேரவைத் தலைவரும் இப்போதுள்ள சட்டப்பேரவை தற்காலிகத் தலைவராக இருக்கும் அன்பழகனும் இதை மீறி அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனா். இப்போதுள்ள பதவியை எப்படியாவது நிரந்தரமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகன் பிரசாரம் செய்கிறாா்.
மின்துறையின் கவனக்குறைவு காரணமாக இப்போது ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளாா். ஆனால் அரசு தரப்பில் இதற்கு ஓா் ஆறுதல் கூட சொல்லவில்லை. புதுச்சேரியில் இது போன்று நிறைய மின்கம்பங்கள் சாய்ந்து கொண்டும், மேலே வயா்கள் தொங்கிக் கொண்டும் இருக்கின்றன. மேலும், மின்துறையைத் தனியாரிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது என்றாா் வைத்திலிங்கம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.