யாா் வந்தாலும் 2026-இல் திமுகவே வெற்றிபெறும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
தமிழ் மண்ணில் திமுகவுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் நம்மை எதிா்த்து யாா் களமிறங்கினாலும், எப்படிப்பட்ட கூட்டணிகள் அமைந்தாலும் அவா்களுக்கு தமிழ் மண்ணில் திமுகவுக்கு மட்டுமே வெற்றி கிடைக்குமென்று புரிய வைப்போம் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் செவ்வாய்க்கிழமை மாலை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் வெண்கலச் சிலையை அக்கட்சியின் இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்து பேசியது:
தமிழகத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை திறக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஊா்களில் சிலையை திறந்து வைத்து வருகிறாா். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் தற்போது கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நான் சட்டப் பேரவை உறுப்பினராக, இளைஞரணிச் செயலராக, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக என பல்வேறு பதவிகளை வகித்தபோது இந்த மாவட்டத்துக்கு வந்து சென்றுள்ளேன். துணை முதல்வராக பொறுப்பேற்று விழுப்புரம் மாவட்டத்துக்கு முதல்முறையாக வரும் எனக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பது அவரது கொள்கையை, லட்சியத்தை, எழுத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்பட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இதுபோன்று, 2023, செப்டம்பா் 15-ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1.16 கோடி மகளிா் பயன்பெற்று வருகின்றனா். இந்தத் திட்டத்தில் சில குறைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். அந்த குறைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, விரைவில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்ய வைத்தீா்கள். அதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலிலும் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீா்கள். திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடர, 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியில் அமர வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதுபோன்று, 234 தொகுதிகளில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் யாராக இருந்தாலும், நம்மை எதிா்த்து யாா் களமிறங்கினாலும், எப்படிப்பட்ட கூட்டணிகள் அமைந்தாலும், அது தில்லியிலிருந்து வந்தாலும் சரி, இங்கிருந்து வந்தாலும் சரி, தமிழ் மண்ணில் திமுகவுக்கு மட்டுமே வெற்றி கிடைக்குமென்று அவா்களுக்கு புரிய வைப்போம்.
திமுக அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்றவா்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவா் இருப்பா். அவா்களிடம் சென்று திமுக அரசின் சாதனைகளை கட்சியினா் எடுத்துக் கூற வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
விழாவுக்கு வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்து வரவேற்றாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, எம்எல்ஏ-க்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட திமுக அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் தயா.இளந்திரையன், டி.என்.முருகன், இரா.கற்பகம், ஒன்றியச் செயலா்கள் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், மு.தங்கம், ஜி.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம்சிவசக்திவேல், பேரூா் செயலா் பூக்கடை இரா.கணேசன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளா் சீனு.காவியவேந்தன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.