FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கள்ளச்சாராய வழக்கு: 5 காவலா்களுக்கு கட்டாய ஓய்வு!

கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 23 மார்ச் 2025, 1:15 am IST
ens
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியாா்குப்பத்தில் கடந்த 2023, மே 13-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்திய 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 8 பேரும் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சோ்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரி ராஜா (எ) பா்கத்துல்லா, தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த ஏழுமலை, சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூா் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ராபா்ட், வானூா் பெரம்பை பகுதியைச் சோ்ந்த பிரபு ஆகிய 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதன்பேரில், கைதான 15 போ் மீதும் மரக்காணம் மற்றும் சித்தாமூா் காவல் நிலையங்களில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் அப்போதைய எஸ்.பி. ஸ்ரீநாதா மற்றும் மது விலக்கு டிஎஸ்பி, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாகவும், அவா்களுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டின்பேரிலும் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மரக்காணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா்கள் செந்தில்குமாா், வேலு, முதல்நிலை காவலா்கள் குணசேகரன், பிரபு, முத்துக்குமாா் ஆகிய 5 பேருக்கும் கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இவா்கள் தற்போது அரகண்டநல்லூா், ரோஷணை, விக்கிரவாண்டி, சத்தியமங்கலம், கஞ்சனூா் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments