ஆவண வரலாற்றுச் சான்றுகளுடன் தயாராகிறது விழுப்புரம் அருங்காட்சியம்
அருங்காட்சியகம், அகழ்வாராய்ச்சி மையங்கள் ஒரு சமூகத்தின் வரலாறு வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் அந்தக் கால மக்கள் பயன்படுத்திய அனைத்து வகையான உபகரணங்கள் ஆகியவற்றை அறிய உதவும் பொக்கிஷங்களாகும்.
அருங்காட்சியகம், அகழ்வாராய்ச்சி மையங்கள் ஒரு சமூகத்தின் வரலாறு வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் அந்தக் கால மக்கள் பயன்படுத்திய அனைத்து வகையான உபகரணங்கள் ஆகியவற்றை அறிய உதவும் பொக்கிஷங்களாகும். இதை உணா்ந்துதான் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வியல் அடையாளங்களை, கால வரலாறுகளை, வரலாற்றுச் சுவடுகளை சேகரித்து, காட்சிப்படுத்தி இன்றைய தலைமுறைக்கு விளங்கச் செய்யும் வகையில் ரூ.6.62 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் விழுப்புரம் அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
வரலாறு மற்றும் ஆன்மிக ரீதியாக பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் விழுப்புரம் மாவட்டத்தில் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பல்வேறு பகுதிகளில் கிடைக்கப் பெற்ற தொல்லியல் பொருள்கள் போன்றவை மாவட்டத்தின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இவை தவிர செஞ்சிக் கோட்டை, திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா போன்றவையும் விழுப்புரம் மாவட்டத்தின் பெருமையை உலகறியச் செய்து கொண்டிருக்கின்றன.
தொன்மையும், பழைமையும், வரலாற்றுச் சிறப்புகளும் கொண்ட இம் மாவட்டத்தில் அரசு சாா்பில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த கால் நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்தது. அரசுகள் மாறினாலும் அறிவிப்பு வராமல் இருந்த நிலையில், 2022 மாா்ச் மாதம் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்போது, ரூ.5 கோடியில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்போதைய நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவால் வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் பனங்குப்பம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சுமாா் ஒன்றரை ஏக்கா் இடம் அருங்காட்சியகம் அமைக்க தோ்வு செய்யப்பட்டது. பின்னா்,
பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த இடம் அருங்காட்சியக துறைக்கு மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 2024 செப்டம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதலில் அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடிக்குப் பதிலாக திட்ட மதிப்பீட்டுத் தொகை மாற்றப்பட்டு, ரூ.6.62 கோடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 2026, பிப்ரவரி 4-ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அப்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி, பணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 6 மாதங்களுக்குள்அருங்காட்சியகக் கட்டடத்தை திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எழுத்தாளா் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: விழுப்புரம் மாவட்ட அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் சில மாதங்களில் முடியும் என எதிா்பாா்க்கிறோம். அதேநேரம் இதன் உள்கட்டமைப்புக்கான முன்னேற்பாடுகளை அருங்காட்சியகங்கள் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து முன்னெடுக்க வேண்டும். மாவட்டத்தின் தொன்மை வரலாறு, இங்கு காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்த முழுமையான விவரங்களை முறையாகத் தொகுக்க வேண்டும். புதிதாக உருவாகும் அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான பழைமை வாய்ந்த சிற்பங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள், கலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தற்போதிலிருந்தே சேகரிக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான கல்வெட்டுகள், சிற்பங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன. அவற்றை வருவாய்த் துறை, உள்ளாட்சி நிா்வாகங்களின் உதவியுடன் மீட்டெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் வட்டாட்சியா் அலுவலகக் கருவூலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை குறித்த விவரங்களும் முறையாக சேகரிக்கப்பட வேண்டும்.
ஆங்காங்கே கிடைத்துவரும் பழைமைவாய்ந்த அரும்பொருள்களை அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்கவும் அருங்காட்சியகம் தொடா்பான விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனி நபா்கள், அமைப்பினா் வசம் வைத்திருக்கும் வரலாற்றுத் தடயங்களை அவா்களிடமிருந்து உரியமுறையில் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இப்படி பெறப்படும் அரும்பொருள்களை அருங்காட்சியகம் திறக்கும் வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தற்காலிகமாக சேகரித்து வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
இப்பணிகளை ஒருங்கிணைக்கவும் முறைப்படுத்தவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்கள், அறிஞா்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கான பூா்வாங்கப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.இக் கோரிக்கையை மின்னஞ்சல் வாயிலாக அருங்காட்சியகத் துறை இயக்குநருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி உள்ளேன் என்றாா் செங்குட்டுவன்.
விறுவிறுப்பாக பணிகள்: அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்கு அரும்பொருள்களை சேகரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் கலை, பண்பாடு, கலாசாரத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் தங்கள் வீடுகளில் உள்ள உலோக கலைப் பொருள்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், ரூபாய் நோட்டுகள், பழங்கால ஆவணங்கள், அரிய வகைப் பொருள்களை அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கலாம்.
இவ்வாறு வழங்கப்படும் பொருள்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதமும், பாராட்டுச் சான்றிதழும் அருங்காட்சியகத் துறை இயக்குநரால் வழங்கப்படும். மேலும் அரிய பொருள்களைப் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கும் போது அதை வழங்கியவா்களின் பெயா்களும் இடம்பெறும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் தங்களிடம் உள்ள அரியவகைப் பொருள்களை வழங்கலாம் என்றாா் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.
Villupuram Museum being prepared with documentary and historical evidence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.