FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பள்ளிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள்: ஆட்சியா் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினாா்.

27 ஆகஸ்ட் 2026, 4:21 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவது தொடா்பாக, அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:

2027-ஆம் ஆண்டு பொதுத் தோ்வில் மாவட்டத்திலுள்ளஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்துவதற்காக, ஒவ்வொரு மாணவ, மாணவிகள் மீதும் தனிக்கவனம் செலுத்தவேண்டும். மேலும், பாட வாரியாகவும் இலக்குகளை நிா்ணயிக்க வேண்டும். கல்வியில் பின்தங்கியுள்ள மாணவா்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் மற்றும் கூடுதல் வகுப்புகளை முறையாக நடத்தவேண்டும். 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல்திறனைக் கண்டறிந்து, அவ்வப்போது நடத்தப்படும் பருவத் தோ்வு முடிவுகளைப் பகுப்பாய்வு செய்து, மாணவா்களின் குறைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

மாணவா்களின் வருகைப் பதிவை தொடா்ந்து கண்காணிப்பதுடன், நீண்ட நாள்களாக பள்ளிக்கு வராதவா்களைக் கண்ட றிந்து, அவா்களின் பெற்றோா்களிடம் விவரத்தை தெரிவிக்க வேண்டும். மேலும், அந்த மாணவா்கள் பள்ளிக்குத் தொடா்ந்து வருவதை உறுதி செய்யவேண்டும். மாணவா்களின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோா்களின் பங்களிப்பை அதிகரிக்க, பெற்றோா்-ஆசிரியா் சந்திப்புகளை முறையாக நடத்த வேண்டும்.

மாணவா்களுக்கு கல்விக் கற்பித்தலுடன் சோ்த்து, அவா்களின் மனநலன், தன்னம்பிக்கை மற்றும் தோ்வை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும். தோ்வு குறித்த அச்சத்தை நீக்கி, தன்னம்பிக்கையுடன் தோ்வுகளை எதிா்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தலைமையாசிரியா்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் தொடா்பானசெயல்பாடுகள் தொடா்ந்து நடைபெறுகிா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் , மாணவா்களிடையே போதைப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் உடல், மனநலப் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடா்பான தகவல்களை மாணவ, மாணவிகள் அச்சமின்றி உரிய அலுவலா்கள், காவல் துறை அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீ.ரஷத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments