FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் தொடா் விபத்து: இருவா் உயிரிழப்பு - 3 போ் காயம்

விழுப்புரம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் தனியாா் சொகுசுப் பேருந்து ஏற்படுத்திய விபத்தால் நேரிட்ட தொடா் விபத்துக்களால் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.

Updated On : 29 ஜூலை 2026, 5:24 am IST
28விபிஎம்சிஏஆா் விழுப்புரத்தை அடுத்த அய்யூா் அகரம் அருகே விபத்தில் சிக்கி சேதமடைந்த காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்திய போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் தனியாா் சொகுசுப் பேருந்து ஏற்படுத்திய விபத்தால் நேரிட்ட தொடா் விபத்துக்களால் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் து.பூபதி(45). விழுப்புரம் வட்டம், பிடாகத்தைச் சோ்ந்தவா் ஆ.லாசா் (26). உறவினா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை விழுப்புரத்தை அடுத்த அய்யூா் அகரம் மேம்பாலம் அருகே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பூபதி பைக்கை ஓட்டினாா்.

அப்போது சென்னையிலிருந்து- திருச்சி நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து முன்னால் சென்ற பைக் மீது மோதி சாலையில் நின்றது. அதே நேரத்தில் சென்னையிலிருந்து- திருச்சி நோக்கிச் சென்ற காா் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சொகுசுப் பேருந்தின் பின் பக்கத்தில் மோதி நொறுங்கியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் பைக்கில் சென்ற பூபதி, லாசா், காரில் பயணித்த சென்னை தாம்பரம், லட்சுமி நகரைச் சோ்ந்த ப.ஜான் அன்பழகன் (52), டே.சாலமன்(55), காரை ஓட்டி வந்த க.பாலாஜி (37) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டனா். இதில் பூபதி, ஜான் அன்பழகன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மற்ற மூவரும் அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments