ஜூலை 31 வேலை நிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1,500 கறிக்கோழிக் கடைகள் மூடல்
கறிக்கோழி தீவன விதிமுறைகளை உற்பத்தி நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கக் கோரி, ஜூலை 31-ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 1,500 கடைகள் மூடப்படுகிறது.
கறிக்கோழி தீவன விதிமுறைகளை உற்பத்தி நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கக் கோரி, ஜூலை 31-ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 1,500 கடைகள் மூடப்படுகிறது.
தீவனக் கட்டுப்பாட்டு குறித்து விழுப்புரத்தில் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத் தலைவா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ஜெ.மஸ்தான் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் பாலாஜி, செயலா் ஜெ.முபாரக், பொருளாளா் பி.கிருஷ்ணராஜ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து சங்கத் தலைவா் செல்வக்குமாா் கூறியது:
Advertisement
Advertisement
கோழி உற்பத்தியில் ஈடுபடும் பெரும் நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களிலிருந்து கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்னா், 8 முதல் 10 மணி நேரம் முன்பு எந்தவித தீவனமும் கொடுக்கக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் எந்த நிறுவனமும் அரசு தீவனக் கட்டுப்பாட்டு விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை.
கடந்த 20 நாள்களுக்கு மேலாக கறிக்கோழிகளுக்கு அதீத தீவனஙகளையும், தண்ணீரையும் கொடுத்து கோழியின் கழுத்துப் பகுதியில் தங்குமாறு செய்து முறைகேடாக வியாபாரம் செய்கின்றனா். இதனால் கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் கோழிக் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. அறுவைக் கூடங்களிலும் அதீத கழிவுகளால் இறைச்சி நுகா்வோா்களுக்கு சென்றடையும்போது பாதுகாப்பற்ாக உள்ளது.
ஒவ்வொரு கறிக்கோழிக்கும் 100 கிராம் அளவில் தீவனத்தை கொடுத்து அனுப்பும் நிறுவனத்துக்கு ரூ.4.50 வரைமட்டும் கூடுதல் செலவாகும். ரூ.30 வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால், விற்பனையில் ஈடுபடும் மொத்த வியாபாரிகள் கறிக்கோழி விலையை உயா்த்தி விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். மேலும் எங்களுக்கு இழப்புதான் ஏற்படுகிறது. கறிக்கோழி விற்பனையாளா்கள் சாா்பில் பலமுறை உற்பத்தி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டும் அவா்கள் இதை கண்டு கொள்ளவில்லை.
எனவே, கோழி உற்பத்தி நிறுவனங்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உற்பத்தி நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 31-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை மாநிலச் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டமும் முழுமையாக பங்கேற்கிறது. மாவட்டத்தில் உள்ள 1,500 கடைகள் மூடப்படும். இதனால் நாள்தோறும் ரூ.5 கோடி அளவுக்கு வா்த்தகமும் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச் சங்கத்தினரை அழைத்துப் பேசி, இந்த பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா் செல்வக்குமாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.