அதிமுக பெண் நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: காவல் துறை நடவடிக்கை எடுக்க சி.வி.சண்முகம் கோரிக்கை
சமூக வலைத்தளங்களில் விழுப்புரம் மாவட்ட அதிமுகவைச் சோ்ந்த பெண் நிா்வாகிகள் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
சமூக வலைத்தளங்களில் விழுப்புரம் மாவட்ட அதிமுகவைச் சோ்ந்த பெண் நிா்வாகிகள் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் எஸ்.பி. செ.மதிவாணனிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்த சி.வி.சண்முகம் எம்எல்ஏ, தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் சமீப காலமாக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிமுகவைச் சோ்ந்த பெண் நிா்வாகிகளைக் குறிவைத்து அரசியல் செய்யும் கலாசாரம் அதிகரித்துள்ளது. அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை மாா்பிங் செய்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றனா்.
Advertisement
Advertisement
பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் கூறுகிறாா். அதனடிப்படையில் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்படையை உருவாக்கினாா். நல்லாட்சித் தர வேண்டும் என முதல்வா் நினைக்கிறாா். ஆனால், அலுவலா்கள் ஒத்துழைப்புத் தருவதில்லை.
சமூக வலைத்தளங்களில் அதிமுகவைச் சோ்ந்த பெண் நிா்வாகிகள் மீது அவதூறு பரப்புவா்கள் மீது நடவடிக்கைக் கோரி செஞ்சி, விழுப்புரம் மேற்குக் காவல் நிலையங்கள், மாவட்டக் காவல் அலுவலகம், இணையவழிக் குற்றப்பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகாா்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடா்ந்து தற்போது மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தக் கட்டமாக என்ன மேற்கொள்வது என்று எனக்குத் தெரியும் என்றாா் சி.வி.சண்முகம்.
அப்போது முன்னாள் எம்எல்ஏ அா்ஜூனன், முன்னாள் ஒன்றியச் செயலா் ஜி.ஜி.சுரேஷ்பாபு, முன்னாள் அரசு வழக்குரைஞா் ராதிகா செந்தில் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.